சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரம் - 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்து வந்தது தொடர்பாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
x
இந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து, ஸ்டாலின்  உள்பட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் மூன்றாவது நாளாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, உரிமைக் குழு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, சபையின் கண்ணியத்தை காக்கவே உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். இந்த வாதங்களுக்கு பதிலளித்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், அமித் ஆனந்த் திவாரி, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் வாதிடுகையில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ'க்களுக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் தி.மு.க மீது மட்டும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டனர். சபாநாயகரின் அனுமதி பெற்றே ஸ்டாலின், குட்கா விவகாரத்தை எழுப்பியதாகவும், மானியக் கோரிக்கை நடவடிக்கைகளில் அவர் குறுக்கீடு செய்யவில்லை எனவும் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்த நீதிபதிகள், சட்டமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரிய வழக்குகள் மீதான விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்