(13/08/2020) ஊர்ப்பக்கம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
(13/08/2020) ஊர்ப்பக்கம்
x
16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அன்பரசன், பிரதாப் ஆகியோர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி அளித்த புகாரை அடுத்து இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

16 வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கு - டிக்டாக் மோகத்தால் நிகழ்ந்த சம்பவம்

மயிலாடுதுறையில், டிக்டாக் மூலம் பழகி 16 வயது சிறுமியை கடத்திய வழக்கில் அரக்கோணத்தை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு டிக்டாக் மூலம் சஞ்சய் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்த நிலையில், அரக்கோணத்தில் சிறுமி மீட்கப்பட்டார். இதையடுத்து, சிறுமியை கடத்திய சஞ்சய் குமாரை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானை

நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், காட்டு யானைகள், மலைப்பாதை சாலையின் அருகே உள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை ஒன்று குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றித்திரிகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் அங்குள்ள ஆதிவாசி கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

சிபிஐ அதிகாரி போல் நடித்து கொள்ளை

திண்டுக்கல்லில் சிபிஐ அதிகாரி போல் நடித்து கொள்ளையடித்த வழக்கில், 6 பேரை போலீசார் கைது செய்தனர். அரசு மதுபானக்கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் காளீஸ்வரன், பென்னாகரத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது வீட்டிற்குள் புகுந்த 6 பேர் சிபிஐ அதிகாரிகள் என கூறி, பணம் மற்றும் நகைகளை எடுத்து சென்றனர். இந்த வழக்கில், ஒரு வருடத்திற்கு பின் கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்கம் மட்டுமே கொள்ளை போனதாக அவர் புகார் அளித்த நிலையில் ஆறரை கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

மேட்டூர் அடுத்த திப்பம்பட்டியில் நடைபெறும் தடுப்பணை பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் ஆய்வு செய்தார். 565 கோடி ரூபாய் மதிப்பிலான மேட்டூர் - சரபங்கா நீரேற்று திட்டத்துக்கு, கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, தடுப்பணை கட்டும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ராமன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வெளிமாநில விதை நெல்லால் விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள், தெலுங்கானாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள அஞ்சீ என்ற ரக நெல்லை வாங்கி நடவு செய்துள்ளனர். இந்நிலையில், நடவு செய்து 4 மாதம் ஆகியும் இதுவரை கதிர் வராததால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து விதை நெல்லை விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா அச்சத்தில் அசாம் தொழிலாளி தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கொரோனா அச்சத்தில் அசாம் மாநில தொழிலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே பணிக்காக சாத்தூரில் தங்கியிருந்த பிஜன் குமார்தாஸ் என்பவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தமக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்