"ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டிருக்க முடியாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் சமூக பரவல் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 136 கோடி ரூபாய் செலவில் கொரோனா தடுப்பு  சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர்
750 படுக்கைளுடன், அனைத்து நவீன வசதிகளை கொண்டது இந்த சிறப்பு மருத்துவமனை என்று கூறினார்.

மக்கள் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நோய் பரவலையும் தடுக்க வேண்டும், மக்கள் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.  ஊரடங்கை மட்டும் நீட்டித்து கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறினார். சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாகவும், வீடு வீடாக சென்று  பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் சமூக தொற்று பரவல் ஏற்படவில்லை என்று கூறிய அவர், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும் என்று தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நியாயவிலைக்கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவதாகவும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா தொற்று காற்றில் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறினால், அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்