சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு : கைதான காவலர் முத்துராஜ்-க்கு 14 நாள் நீதிமன்ற காவல்

சாத்தான்குளம் தந்தை , மகன் உயிரிழப்பு வழக்கில் காவலர் முத்துராஜூம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர்,  உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் முருகன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து 15-நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இவ்வழக்கில் தலைமறைவான காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான அரசன்குளத்தில் முத்துராஜை போலீசார்  கைது செய்தனர். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கீழ மங்கலம் கிராமத்தில் காட்டுப் பகுதியில் இருந்த முத்துராஜின்  இருசக்கர வாகனத்தை தனிப்படை போலீசார் கைப்பற்றி பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை போலீசார், தூத்துக்குடி அழைத்து சென்று  சிபிசிஜடி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணைக்குப் பின்னர் முத்துராஜ்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் அவர் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நிதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்