அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - ஸ்டாலின் குற்றச்சாட்டு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு, அதிமுக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
பா.ஜ.க.வின் கொள்கைதான் அ.தி.மு.க.வின் கொள்கை என்றால், அதில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? என்று கடுமையாக சாடி உள்ளார். மத அடிப்படையில் சட்டத்தை நிறைவேற்றி, இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என பிரதமர் சொல்கிறார் என்றால், நாடு எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை அதிமுக இழைத்து விட்டதாகவும், அவர் குற்றம்சாட்டி உள்ளார். மாநிலங்களவையில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் எஸ். ஆர். பாலசுப்ரமணியம், "இலங்கையை விட்டு விட்டீர்கள். இஸ்லாமியர்களை விட்டு விட்டீர்கள். ஆனாலும் நாங்கள் இந்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம்" என்று கூறி - அ.தி.மு.க.வின்  இரட்டை வேடத்தை தன்னை அறியாமல் அவையிலேயே அரங்கேற்றியிருப்பதாக, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் நலன் பற்றியோ, சிறுபான்மையினருக்குப்  பாதுகாப்பு அரணாக இருப்போம்" என்றோ அ.தி.மு.க., இனியும் பகட்டாகப் பேசி, வரலாற்றுப் பிழைகளைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக, கூறி உள்ளார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் உண்மை முகத்தை, திமுகவினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து உணர்த்திட வேண்டும் என்றும், ஸ்டாலின் தமது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்