தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை
x
கன்னியாகுமரி : தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 



கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை வெள்ள அபாய அளவான 71 அடியை எட்டியுள்ளதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பரளியாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   

கொடைக்கானல் : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு 



கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து கொடைக்கானலில் மோய‌ர்பாயிண்ட், குணா குகை, பைன்பார‌ஸ்ட், பில்ல‌ர்ராக் ம‌ற்றும் பேரிஜ‌ம் பகுதிகளுக்குச் செல்ல‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளுக்கு அனும‌தி இல்லை என  வனத்துறையினர் அறிவித்துள்ளனர். பலத்த மழை காரணமாக கொடைக்கானல் மலைச் சாலையில் மண்சரிவு ஏற்பட்டால் அதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். 

ராமநாதபுரம் : பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு 



ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இடி-  மின்னலுடன் கூடிய பலத்த மழை  பெய்ததால் இரவில் மின்சாரம் பல இடங்களில் துண்டிக்கப் பட்டது. பரமக்குடி, திருவாடானை, ராமேஸ்வரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது

திருவள்ளூர் : சாலைகளில் ஓடும் நீர்



திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து, குடிநீர் பஞ்சம் ஏற்படாது எனவும், விவசாய தேவையை பூர்த்தி செய்ய பயனளிக்கும் எனவும்  மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை : 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை 



புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி, கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், மீமிசல், ஆவுடையார்கோவில்   உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் இடியுடன் கூடிய மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் சுற்றுவட்டார பகுதி இருளில் மூழ்கியது. 

Next Story

மேலும் செய்திகள்