காமராஜரின் நினைவு தினம் - கிங் மேக்கரின் நினைவலைகள்

காமராஜரின் நினைவு தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
காமராஜரின் நினைவு தினம் - கிங் மேக்கரின் நினைவலைகள்
x
காந்திய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 18 வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டு 1921ம் ஆண்டு மதுரையில் காந்தியை நேரில் சந்தித்து மகிழ்ந்தார் காமராஜர். தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் காங்கிரஸ் கட்சியை கொண்டு சென்ற காமராஜர், 1937ம் ஆண்டு தனது 34வது வயதில் முதன் முறையாக சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏவாக நுழைந்தார். 
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வாழ்நாளில் சுமார் 9 ஆண்டுகளை சிறையிலேயே கழித்த காமராஜர் பொதுவாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்ததால்  திருமணமே செய்து கொள்ளவில்லை. 1954ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற காமராஜர் பின்னர் 1957 மற்றும் 1962ம் ஆண்டு தேர்தல்களிலும் தொடர் வெற்றி பெற்று  3 முறை தொடர்ந்து முதல்வராக நீடித்தார். தனது ஆட்சி காலத்தில் ஏராளமான பள்ளிகளை திறந்ததோடு பள்ளி வேலை நாளை 180ல் இருந்து 200 ஆக அதிகரித்தார்  காமராஜர். மதிய உணவு திட்டத்தையும் அறிமுகம் செய்தார்.
அவரது தீவிரமான முயற்சியால் 7 சதவீதமாக இருந்த தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 37 சதவீதமாக அதிகரித்தது. அதனால் தான் 'கல்விக் கண் திறந்த காமராஜர்' என மக்கள் போற்றுகின்றனர்.  பவானி, வைகை, மணிமுத்தாறு, சாத்தனூர், கிருஷ்ணகிரி போன்ற முக்கிய அணைகள் எல்லாம் அவரது ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை தான்.என்எல்சி, திருச்சியில் பாரத மிகுமின் நிறுவனம், சென்னையில் சிபிசிஎல், ஐசிஎப் என தமிழகத்தின் பிரதான தொழில் நிறுவனங்கள் எல்லாம் காமராஜரின் முயற்சியால்  தமிழகத்துக்கு கிடைத்த பொக்கிஷங்கள்.9 ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த காமராஜர், கட்சி பணிக்காக 1963ம் ஆண்டு அக்டோபர் 2  காந்தி பிறந்த நாளில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை 'காமராஜர் பிளான்' என அழைத்ததோடு அவரை பின்பற்றி லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் உட்பட 6 மத்திய அமைச்சர்களும் 6 மாகாண காங்கிரஸ் முதலமைச்சர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். பதவியை ராஜினாமா செய்த பிறகு தேசிய அரசியலில் கோலோச்சியதோடு லால்பகதூர் சாஸ்திரி இந்திரா காந்தி ஆகியோர் பிரதமராவதில் பெரும்பங்கு ஆற்றியவர் காமராஜர்.இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மூத்த தலைவர்களுடன் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த காமராஜர் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக நீடித்தார். 55 ஆண்டுகள்  நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த காமராஜர் 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி  காந்தி பிறந்த தினத்தில் விண்ணுலகம் புறப்பட்டார். முதல்வர் பதவியில் இருந்து இறங்கி  மிகச் சரியாக 12வது ஆண்டில் மறைந்தார்  காமராஜர். மண்ணுலகை விட்டு புறப்பட்டபோது  130 ரூபாய் பணம், 4 ஜோடி வேட்டி  சட்டைகள், 2 ஜோடி செருப்புகள், சில புத்தகங்கள் மட்டுமே இருந்தன இந்த ஏழை பங்காளனின் வீட்டில்...






Next Story

மேலும் செய்திகள்