இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.... சூடு பிடிக்கும் அரசியல் களம்

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர்கள் தேர்வில் கட்சிகள் தீவிரமாக களமிறங்கி உள்ளன.
x
தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டப் பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இந்த அறிவிப்பை வெளியிட்டார். இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்பு மனு, திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் அக்டோபர் 3 ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் தலைமை தேர்தல் அணையர் அறிவித்துள்ளார். 

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக விழுப்புரம் மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான சுப்பிரமணியன் மற்றும் நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீசும் அறிவித்துள்ளனர். தேர்தல் ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் எனவும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, இடைத் தேர்தல் வேட்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு,  நா​ளை நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் விருப்ப மனு வழங்கலாம் எனவும், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்கள் நாளை பிற்பகல்  3 மணி வரை பெறப்படும் என​வும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். 

இதனிடையே, இடைத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள், சென்னை - அண்ணா அறிவாலயம் சென்று, தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி- காமராஜர் நகர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்றார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என திமுக  அறிவித்துள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 23 -ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விரும்புவோர்  நாளை விருப்ப மனு அளிக்கலாம் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளை அதிமுக கைப்பற்றும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இடைத் தேர்தல் அறிவிப்பு மற்றும் கட்சிகளின் தொடர் நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்