கையை இழந்தாலும் தன்னம்பிக்'கை' இழக்காத இளைஞர்...

விபத்தில் ஒரு கையை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காமல் மண் பானை உள்ளிட்ட மண் கலயங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு, இன்றைய கால இளைஞர்களுக்கு ஒரு முன் உதாரணமாக விளங்கி வருகிறார் மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர்.
x
மதுரை மாவட்டம் பரவை அருகே வசித்து வருபவர் வேல்முருகன். இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய போது ஒரு விபத்தில் தனது ஒரு கையை இழந்தார். ஆனாலும் தன்னம்பிக்கை இழக்காத அவர், அவரது குடும்ப பாரம்பரிய தொழிலான பானை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு தன் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அந்த நிறுவனம் எந்த விதமான இழப்பீடும் தந்து உதவிக்கரம் நீட்டாத நிலையில், பாரம்பரிய தொழில் கை கொடுத்து உதவியதாக அவர் கூறுகிறார். உன்னால் முடியும் என்று பெற்றோர் அளித்த ஊக்கத்தால் தான் தன்னால் இந்த தொழிலில் ஈடுபட முடிந்ததாக கூறும் அவர், குறை என்பது நம் எண்ணத்தை பொறுத்தது தானே என்று கூறுகிறார்..

கண்ணை இழந்தாலும் கூட தொழில் செய்ய பழக வேண்டும் என்று கண்ணை கட்டிக்கொண்டு பானை தயாரிப்பு முயற்சியில் வேல்முருகன் தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்றிருப்பதாக கூறும் அவரது தந்தை, தன் மகனுக்கு அரசு உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். இந்த தொழிலில் வருமானம் குறைந்து வருவதால் மீண்டும் தன்னம்பிக்கையுடன் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருப்பதாக கூறும் அவர், தனக்கு வேலை வழங்கி, அரசு, உதவ முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். ஒரு கையுடன் உழைத்து முன்னேற துடிக்கும் இந்த முன்னுதாரண இளைஞருக்கு அரசு கை கொடுத்து உதவ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒரே எதிர்பார்ப்பு.

Next Story

மேலும் செய்திகள்