ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட சரவணபவன் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை 4 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
x
மேலாளர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்வதற்காக, சாந்தகுமாரை கடத்தி கொலை செய்ததாக ராஜகோபால் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், ஜூலை 7 ஆம் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்டது. இதே போல மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, டேனியல் உள்பட 9 பேர் நேற்று சரணடைந்ததைபடுத்து அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. உடல் நிலையை காரணம் காட்டி சரணடைய அவகாசம் கோரிய ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனம் ஆகியோரின் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து, ராஜகோபால், ஜனார்த்தனம் ஆகியோர் ஆம்புலன்சில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். மூன்றாவது மாடியில் உள்ள நீதிமன்ற அறையில் ஆஜர்படுத்த இயலாது என்பதால்,  ஆம்புலன்சில் அவர்களை பார்வையிட்டு உத்தரவு பிறப்பிக்கும்படி, அவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, இருவரையும் சக்கர நாற்காலியில் அழைத்து வந்து ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, ஜனார்த்தனன் சக்கர நாற்காலியிலும், ராஜகோபால் ஸ்டெரக்சரில் படுத்தப்படுக்கையாகவும் நீதிபதி முன் சரணடைந்தனர். பின் அவர்களை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்