நிதிப் பற்றாக்குறை அதிகரித்தால் விலைவாசி உயருமா ? எப்படி கணக்கிடப்படுகிறது நிதிப் பற்றாக்குறை ?

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கடன் வாங்க உள்ளது என்பதை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் நிதிப் பற்றாக்குறை மூலம் அறிந்து கொள்ள முடியும்.
x
ஓராண்டுக்கான அரசின் வருவாய், செலவினங்கள் குறித்த விரிவான அறிக்கையே வரவு செலவு அறிக்கையாக மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. அரசுக்கு எந்தெந்த துறைகளில் இருந்து வருவாய் கிடைக்கும்? அதன் உத்தேச மதிப்பு எவ்வளவு ? எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவிடுகிறோம்? அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விரிவான அறிக்கையே பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாகவே இந்தியாவின் வரவு செலவு அறிக்கை பற்றாக்குறை என்கிற அளவிலேயே உள்ளது.  
நிதிப் பற்றாக்குறை 4 சதவீதத்துக்கு மேல் அதிகரித்தால், பொருளாதார ரீதியாக இந்தியாவுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். அதனால் 4 சதவீதம் என்கிற அளவுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படுகிறது. நடப்பு நிதி ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை 3 புள்ளி 4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2018 -19 நிதியாண்டில் 3 புள்ளி 3 சதவீதமாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த  இடைக்கால பட்ஜெட்டில் வரவு செலவு பரிவர்த்தனைகள், மிகப்பெரிய அளவில் பட்ஜெட்டுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டதால் நிதிப் பற்றாக்குறை அளவு குறைத்து காட்டப்பட்டதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டினர். செலுத்த வேண்டிய தொகைகள், செலவினங்கள் போன்றவை அடுத்த நிதியாண்டுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளன. ஆனால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை அதிகமாக இருக்கலாம் என அச்சம் தெரிவித்திருந்தனர். அதே நேரத்தில் இடைக்கால  பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த சர்வதேச செலாவணி நிதியம், நிதி  பற்றாக்குறையை குறைத்து,  பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில்  தயாரிக்கப்பட்டுள்ளது என கூறியது.

பற்றாக்குறை அதிகரித்தால் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படும்  என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அதனால் நிதிப்பாற்றக்குறை இலக்கை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் உள்ளது. வரும் பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கில் மாற்றங்கள் இருக்குமா  என்பதையும் பொருளாதார நிபுணர்கள் கவனித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்