தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை

வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை
x
வேலூர்
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைகாற்றுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் மழை கொட்டி தீர்த்தது. வெப்பம் தணிந்து இதமான கால நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

காஞ்சிபுரம் 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், ஓரிக்கை, செவிலிமேடு, வந்தவாசி சாலை, உள்ளிட்ட பகுதிகளில் லேசான காற்றுடன் ஆலங்கட்சி மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியாக கால நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்
திண்டுக்கலில் நேற்றிரவு 7 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து திண்டுக்கல் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளான பாலகிருஷ்ணாபுரம், சிலுவத்தூர், பெரியகோட்டை, பில்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது.  இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றும் வீசியதால்  சில இடங்களில் மரங்கள்  முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பகல் முழுவதும் வெப்பம் தாக்கிய நிலையில், இதமான குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

பழனி
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடந்த  சில மாதங்களாக வெய்யில் வாட்டிய நிலையில்,  நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி உள்ளிட்ட இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலூர் 
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் சூறைக் காற்றுடன்  கனமழை பெய்தது .கைலாசகிரி  பகுதியில் சாலையோரம் இருந்த மரம் அங்குள்ள  பீடி தொழிலாளி முபாரக் அலி வீட்டின் மீது  சாய்ந்ததில் வீடு முற்றிலும் சேதமடைந்தது.இதில் அவரது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த பீரோ, கட்டில் மற்றும் பித்தளை சாமான்கள் உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உட்பட நான்கு பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஈரோடு
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கருங்கல்பாளையம், மொடக்குறிச்சி, ஆனைக்கால் பாளையம், லக்காபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல்   மொடக்குறிச்சி, பவானி,  கவுந்தபாடி  உள்ளிட்ட பகுதிகளிலும்  இடி - மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. 

சத்தியமங்கலம் 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப்பகுதிகளில்  பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் பலத்த காற்றுடன் லேசாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால்  வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக சத்தியமங்கல் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. 





Next Story

மேலும் செய்திகள்