ஸ்டெர்லைட் வழக்கு - கடந்து வந்த பாதை...

தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் கடந்து வந்த பாதை.
x
கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமானது. இதையடுத்து,  மே 28ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடி மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஜூன் 22 ஆம் தேதி டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.  மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழு அமைத்தது. இதனிடையே, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை,  உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு,  மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய கோருதல்,  சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டோரை விடுவிக்க கோருதல்  மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் செயல்பட்டுவரும் ஆலையினை மூடவேண்டு்ம் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் தொடரப்பட்ட 15 மனுக்கள் குறித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்து வருகிறது. இதில், ஒரு சில வழக்குகள் முடித்தும் வைக்கப்பட்டுள்ளன. 



இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிப்பதால் எந்தப் பலனும் இல்லை என்று கூறி, இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி சிபிஐக்கு மாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. வழக்கு விசாரணையை தொடங்கிய சிபிஐ, முதற்கட்டமாக துப்பாக்கிச் சூட்டில் இறந்த 13 பேரின் குடும்பத்தினர், காயம் அடைந்த 40 பேரிடம் வாக்குமூலம் பெற்றனர். இந்த சம்பவத்திற்கு காரணமான வருவாய், காவல்துறை அதிகாரிகள் மீது ஆறு பிரிவுகளின் கீழும், வன்முறையை தூண்டியதாக 20 அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. துப்பாக்கிச் சூடு தொடர்பான சிபிஐ விசாரணை மந்த கதியில் நடைபெற்று வருகிறது என்ற புகார் எழுந்துள்ளது. 



இதனிடையே, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழு 2018ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. சில நிபந்தனைகளுடன் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என அந்த  குழு பரிந்துரைத்தது. அதனை ஏற்றுக் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டும் என் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, டிசம்பர் 19ஆம் தேதி தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, ஸ்டெர்லைட் ஆலையில் தற்போதைய நிலையே தொடரும் என உத்தரவிட்டது. விசாரணையின் போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 



இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம், பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. பின்னர், தேவைப்பட்டால், வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அறிவுறுத்தியது. இதையடுத்து, பிப்ரவரி 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி, வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வேதாந்தா நிறுவன சட்டப்பிரிவு பொதுமேலாளர் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர், மின்சார வாரியம், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆலையை பராமரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் இரண்டு முறை முன்வைத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஸ்டெர்லைட் மூடப்பட்டதால், அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மேம்பட்டிருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 



அதேபோல், சுற்றுச்சூழல் சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிய பாத்திமா தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வேதாந்தா நிறுவனத்தை எதிர் மனு தாரராக சேர்த்து கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி உத்தரவிட்டது. இது தொடர்பான விசாரணையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தள்ளிவைத்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்