ஏ.சி. வெடித்து 3 பேர் உயிரிழப்பு... திட்டமிட்ட கொலையா...?

திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்து ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம், திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
x
காவேரிபாக்கத்தை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் கவுதமன், அவரின் தந்தை ராஜ், தாய் கலைச்செல்வி ஆகிய 3 பேர், ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்த இடத்தில், தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, கிடைத்த தடயங்களால் காவல்துறைக்கு  சந்தேகம் எழுந்துள்ளது. அறைக்கு வெளியே கிடந்த மண்ணெண்ணெய் கேன், கருகிய ராஜ் உடலில் இருந்து வழிந்த ரத்தம், மேலும் அதே வீட்டில் தங்கியிருந்த கவுதமனின் அண்ணன் கோவர்த்தன‌ன் எந்த காயமும் இன்றி உயிர் தப்பியது உள்ளிட்ட விஷயங்கள், இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ராஜ் குடும்பத்தில், கடந்த ஒரு வாரமாக சொத்து பிரச்சினையால் சண்டை சச்சரவுகள் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே சொத்துப் பிரச்சினையில், மூன்று பேரும் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார்  விசாரிக்க தொடங்கிவிட்டனர். இது தொடர்பாக கோவர்த்தனனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு இருப்பது உண்மையா? என்பது குறித்து பழுது நீக்கும் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், வழக்கின் முழு தன்மையும் தெரியவரும் என்பதால் அதற்காகவும் காவல்துறையினர் காத்திருக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்