பகலில் சமையல் மாஸ்டர்...அதிகாலையில் 'ஷட்டர்' திருடன்...

பிறவியிலே பேசும் திறனை இழந்த ஒருவர், சென்னையை மிரட்டிய திருடனாக மாறியுள்ளார்... கொள்ளையடிப்பதற்கு அவர் வகுத்த பலே திட்டங்கள் போலீசாரையே அதிர வைத்துள்ளன...
x
கடந்த 10 ம் தேதி சென்னை அண்ணாநகர் சிந்தாமணி சிக்னல் அருகே உள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் ஷட்டரை உடைத்து, கடையில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த மாதம் பத்தாம் தேதி திருமங்கலம் அருகே மூன்று கடைகளில் வரிசையாக ஷட்டரை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்டது. அடுத்தடுத்து அரங்கேயறிய இந்த சம்பவங்கள் போலீசாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தவே, அண்ணாநகர் துணை ஆணையர் சுதாகர் தலைமையில தனிப்படை அமைக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அனைத்து சம்பவங்களிலும் ஒரே நபரின் முகம் பதிவாகி இருந்த‌து. அந்த மர்ம நபர், ஒவ்வொரு முறையும் கொள்ளையடித்துவிட்டு, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்வதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. இதையடுத்து ,அண்ணாநகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மாறு வேடத்தில் பதுங்கி இருந்த போலீசார், கொள்ளையனை சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில், கொள்ளையன் பெயர் சிவா என்பதும் அவர், அரியலூர் மாவட்டம் பழமலை நாதபுரத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

சிவாவை விசாரித்த போலீசார் அதிர்ந்து போனார்கள். கொள்ளையன் சிவா பிறவிலே வாய்ப்பேசும் திறனை இழந்தவன்.. பகலில் ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றும் சிவா, அதிகாலை 4மணி முதல் 6 மணிவரை, ஷட்டர் கொள்ளையனாக அவதாரம் எடுப்பதாக போலீசார் கூறுகின்றனர். கொள்ளையை அரங்கேற்றிவிட்டு, மற்ற வாகனங்களில் சென்றால் ஆபத்து என்பதால், மெட்ரோ ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்துள்ளான் சிவா. அதுவும், கொள்ளையடிக்கும் கடைகளில், விலை உயர்ந்த , தங்க வைர நகைகள், செல்போன்கள் இருந்தால் கூட சிவா அவற்றை கொள்ளையடிப்பதில்லையாம். பணத்தை மட்டும் திருடி கொண்டு, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளான் சிவா. பல திருட்டு வழக்குகளுக்காக சிறை சென்ற சிவா,  கடந்த 2016 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். அதன் பின்னர், பல இடங்களில் கொள்ளைச்சம்பவங்களை அரங்கேற்றியுள்ளதாக அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். சமையல் வேலை, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது, பணத்தை மட்டும் கொள்ளையடிப்பது என சற்றும் சந்தேகம் வராத விதமாக சாதுர்யமாக செயல்பட்டுவந்த கொள்ளையன், போலீசார் வசம் சிக்கியுள்ளதால் வியாபாரிகள் பலர் நிம்மதி அடைந்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்