மக்கள் மன்றம் நிகழ்ச்சி எதிரொலி - டாஸ்மாக் கடை மூடல் : நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நன்றி

விருதுநகரில் காமராஜர் சிலை அருகே டாஸ்மாக் கடை இருப்பதாக தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், குற்றச்சாட்டு எழுந்ததால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடனடியாக உத்தரவிட்டு, அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
x
இடைத் தேர்தல் யாருக்கு சாதகம் என்ற தலைப்பில் தந்தி டி.வி.யின் 'மக்கள் மன்றம்' நிகழ்ச்சி, விருதுநகரில் ராமமூர்த்தி ரோடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில்,  நடைபெற்றது. அதில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுக சார்பில் கான்ஸ்டைன்டன் ரவீந்திரன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகன், நாம் தமிழர் கட்சி சார்பில் காளியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தது, விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை. ஆனால், அல்லம்பட்டியில் உள்ள காமராஜர் சிலையின் பின்புறம் டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்டு வருகிறது என்றார். 

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காமராஜர் சிலை அருகே செயல்படுவதாக கூறப்படும் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று உறுதி அளித்தார். அமைச்சரின் உடனடி அறிவுறுத்தலின் பேரில், இரவு எட்டே முக்கால் மணியளவில், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு, காமராஜர் சிலை அருகே செயல்பட்ட அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது.  தந்தி டிவி-யின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியின் எதிரொலியாக, டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே அமைச்சரின் உடனடி நடவடிக்கைக்கு, காளியம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்