"சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு? " - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் முற்றிலுமான வறண்டுள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு மிகவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு?  - லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு
x
சென்னை மாநகரின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும், செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி  ஆகிய நான்கு முக்கிய  ஏரிகளும் முற்றிலுமாக வறண்டுள்ளது.  இந்த நிலையில், லாரி தண்ணீர் கேட்டு 8 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ஒரு மாதமாக காத்திருப்பதால்,  குடிநீர்  பிரச்சனை மிகப் பெரும் சிக்கலாக உருவாகியுள்ளது. சென்னை மாநகரில் வசிக்கக் கூடிய மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு கோடியை தொட்டுள்ளது. இவர்களின் ஒரு நாள் குடிநீர் தேவை 83 கோடி லிட்டராக உள்ளது. ஆனால் தற்போது 55 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நான்கு ஏரிகளிலும் சேர்த்து 70 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.  

இந்த நிலையில் வீராணத்திலிருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் , கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலமாக கிடைக்கும் தண்ணீர், சென்னை மாங்காடு அருகே கல் குவாரிகளில் இருந்து எடுக்கும் தண்ணீர் என 55 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே தற்போது வழங்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் சென்னையில் தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. வட சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் காலிகுடங்களுடன் பெண்கள் தண்ணீருக்கு அலையக் கூடிய பரிதாபக் காட்சிகள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழலில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என பல தரப்பில் இருந்தும் தண்ணீர் கேட்டு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மாதம் கழித்தே தண்ணீர் கிடைக்கிறது. தண்ணீர் பிரச்சனையை போக்குவதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சென்னை மாநகர மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்