கன்னியாகுமரி : மும்மத மக்களும் ஒரே இடத்தில் வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் பள்ளியப்பன் எனும் உருவமில்லாத கடவுளை மும்மத மக்களும் வணங்கும் கோயில் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி : மும்மத மக்களும் ஒரே இடத்தில் வழிபாடு
x
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் பள்ளியப்பன் எனும் உருவமில்லாத கடவுளை  மும்மத மக்களும் வணங்கும் கோயில் அமைந்துள்ளது. அங்கு இந்துக்கள் விளக்கேற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், முஸ்லிம்கள் சாம்பிராணி பத்தி ஏற்றியும் வணங்குவது வழக்கம். இந்த ஆண்டு சர்வமத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து இன்று நடைபெற உள்ளது. இதற்காக, பள்ளியாடி வட்டார கிராமங்களை சேர்ந்தோர் குடும்பம் குடும்பமாக திரண்டு காய்கறிகளை வெட்டினர். 

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவில் விழா:

நெல்லை பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை உற்சவா்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. உற்சவமூா்த்திகள் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபாலசுவாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வேதநாராயணா் ஆகியோர் கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தனர். கோவிந்தா கோபாலா கோஷங்களுடன் குடைவரை வாயில் தீபாராதனை காட்டப்பட்டு கருடசேவை புறப்பாடு நடைபெற்றது.  

பத்ரகாளி அம்மன் கோயில் பரணேற்று விழா : 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் பரணேற்று திருவிழா நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு பஞ்சாரி மேளம் முழங்க மலையாள நடிகர் சுரேஷ் கோபி முன்னிலையில் முன்னாள் மிசோரம் ஆளுநர் கும்மனம் ராஜசேகரன் லட்சதீபத்தை ஏற்றி வைத்தார்.

சூரியபெருமானுக்கு மகா அபிஷேகம் :

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில் மகா அபிஷேகம் நடைபெற்றது. உஷாதேவி சாயாதேவி சமேத சூரிய பெருமானுக்கு சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சூரிய பெருமானுக்கு பஞ்ச ஆராதனையும் பஞ்ச ஆரத்தி்யும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. 

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா : 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரிஅம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 4ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. குண்டம் இறங்கும் பக்தர்களின் வசதிக்காக 20 கிலோமீட்டர் நீளத்திற்கு இரும்பால் தடுப்புகளும், தீப்பிடிக்காத தகரத்தால் ஆன பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்கள் சில நாட்களாகவே வரிசையில் இடம்பிடித்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு உபயதாரர்கள் உணவு மற்றும் குடிநீர் இலவசமாக வழங்கி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்