ஸ்டெர்லைட் ஆலை கடந்து வந்த பாதை

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது முதல் அது கடந்து வந்த பாதை
x
குஜராத்திலும், கோவாவிலும் அனுமதி கிடைக்காமல் தவித்த ஸ்டெர்லைட் ஆலை, கடந்த 1994 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் கால் பதித்தது. கடந்த 1997-ம் ஆண்டு  ஜூலை 5ம் தேதி ஆலையில் இருந்து விஷவாயு வெளியானதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1998ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி ஆலையை மூட உத்தரவிட்டது. 

அடுத்த மாதமே மேல்முறையீடு செய்து, ஆலை வழக்கம் போல் இயங்க துவங்கியது.ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு எதிராக நடந்த போராட்டங்களை அடுத்து, கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூட மீண்டும் உத்தரவிட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஒப்புதலையடுத்து மீண்டும் ஆலை இயங்கியது.

இதற்கிடையே, ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, 2018-ஆம் ஆண்டு ஆலையை மூடக்கோரிய போராட்டம் தீவிரமானது. கடந்த மே 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து, 2018 மே 28ஆம் தேதியன்று தூத்துக்குடி ஆட்சியர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. உடனே, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க கடந்த டிசம்பர் 15ம் தேதி உத்தரவிட்டது.

இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தன.இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்ததோடு, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்