தமிழக பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் என்னென்ன..?

தமிழக அரசின் 2018-19 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்தார்.
தமிழக பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் என்னென்ன..?
x
வேளாண்துறை அறிவிப்புகள் : 

2019-20ஆம் ஆண்டில், இடி மின்னலுடன் கூடிய திடீர் மழை, இயற்கை தீயால் ஏற்படும் பாதிப்புகளும் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மாநில அரசின் பங்கு தொகைக்காக  621 கோடியே 59 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 84 கோடி ரூபாய் மானிய உதவியுடன், 10 குதிரை திறன் வரை சூரிய சக்தியால் இயங்கும் 2 ஆயிரம் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மற்றும் கரும்பு உற்பத்தி ஊக்கத்தொகைக்காக 380 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 128 வட்டாரம் மற்றும் 360 கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையம் நிறுவ முடிவு செய்து, அதற்காக172 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் சிறப்பு திட்டத்திற்காக 50 கோடியும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத்திற்காக 100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அரசு வேளாண் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 79 கோடியே 73 லட்சம் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன் மீதான வட்டி தள்ளுபடிக்காக 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்துறை அறிவிப்புகள் : 

புத்தக பைகள், காலணிகள், நோட்டு புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உட்பட மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரத்து 656 புள்ளி 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக அரசு தொடர்ந்து வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 313 புள்ளி 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு அதை செயல்படுத்த, இரண்டாயிரத்து 791 புள்ளி 32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் திட்டத்தின் கீழ் 4.19 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இதற்காக 248 புள்ளி 76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019- 20 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் பள்ளி கல்வித் துறைக்காக 28 ஆயிரத்து 757 புள்ளி 62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019- 20 ம் ஆண்டில் ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அண்ணா பல்கலை கழகத்திற்கு 100 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  2019- 20 ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் உயர் கல்வித் துறைக்காக 4 ஆயிரத்து 584 புள்ளி 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு வசதி திட்டம் அறிவிப்புகள் : 

2019-2020 ஆம் ஆண்டில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க, 6 ஆயிரத்து 573 கோடி ரூபாயும், 5 ஆயிரத்து 164 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டிற்கான மத்திய நிதிக்குழு பரிந்துரையின்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்திற்கு 5 ஆயிரத்து178 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றப்படவுள்ளன. இதன் மூலம், அரசால் ஆண்டிற்கு 74 கோடி ரூபாய்  சேமிக்கப்படும். 'திறன்மிகு நகரங்கள்' திட்டத்தின் கீழ், 11 ஆயிரத்து 776 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 326 திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டில், இந்த திட்டத்திற்கு ஆயிரத்து 650 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கான விரிவான திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்திற்கு ஆயிரத்து 546 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு-தனியார் பங்களிப்பு முறையில், கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்கு 5 ஆயிரத்து 259 கோடி ரூபாய்க்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்காக 18 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 2019-2020 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரம்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கான்கிரீட் மேற்கூரை அமைப்பதற்கு கூடுதல் நிதியாக 50 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை ஒரு லட்சத்து 70 லட்சம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20, 000 வீடுகள் கட்ட, 420 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் அறிவிப்புகள் : 

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வேலைவாய்ப்பற்ற 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு, சிறப்பு தகுதித் திறன் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் சார்பில், மத்திய அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தை அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்ட தலைமையிடங்களில், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன்  வேலைவாய்ப்பற்ற 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு, சிறப்பு தகுதித் திறன் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை சார்பில், தமிழகத்தில் வானூர்தி மற்றும் ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மாநிலத்தில் அமைப்பவர்களுக்கு உரிய ஊக்கம் அளிக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.  தொழிற்பேட்டைகளில் இயங்கி வரும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தடையற்ற தரமான மின்சாரத்தை பெறுவதற்கு தனி மின்பாதை அமைத்து, சீராக மின் விநியோகம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வர்த்தக மற்றும் முதலீட்டு மேம்பாட்டு மையம் என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கு 3 ஆயிரத்து 958 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் இதுவரை 1.93 லட்சம் வீட்டு மனைப் பட்டாக்களை தகுதி வாய்ந்த ஏழை குடும்பங்களுக்கு அரசு வழங்கியுள்ளதாக தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருபவர்களின் வீட்டு மனைகள் வரன்முறை செய்து வீட்டுமனை பட்டா வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.  இதன் மூலம் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கால்நடை, மீன்வளத்துறை திட்டங்கள் : 

மரபு திறன் மிக்க நாட்டு இன மற்றும் கலப்பின காளைகளைக் கொண்டு 100 கோடி திட்ட மதிப்பில் புதிய உறைவிந்து உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறைக்காக ஆயிரத்து 252 கோடியும், பால்வளத்துறைக்காக 258 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 420 கோடி ரூபாய் மதிப்பில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி உள்பட 4 இடங்களில் மீன்பிடி துறைமுகம் கட்டவும், கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்டத்துறை, வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை 116 கோடி செலவில் அமைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 240 நேவிக் தகவல்கள் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள், 160 நேவ்டெக்ஸ் கருவிகள் வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காவல்துறைக்கான அறிவிப்பு : 

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஆண்டு, 6 ஆயிரத்து 428 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் 9 ஆயிரத்து 975 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 2019 -20 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்திற்காக 8 ஆயிரத்து 84 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைகளை பொறுத்தவரையில், கடந்த பட்ஜெட்டில், 5 தீயணைப்பு நிலைய கட்ட‌டங்கள் கட்டுவதற்காக 3 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒதுக்கபட்டிருந்த‌து.  இந்த பட்ஜெட்டில், 403 கோடியே 76 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல சிறைச்சாலை பிரிவில், கடந்த பட்ஜெட்டில் 40 புள்ளி 13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில், 319 புள்ளி 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நீதி நிர்வாகத்தை பொறுத்தவரை, கடந்த பட்ஜெட்டில்101 புள்ளி 89 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த‌து. அது இந்த ஆண்டு, ஆயிரத்து 265 கோடியே 64 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது - ஓ. பன்னீர் செல்வம்...

தமிழக அரசின் 2018-19 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்தார். இதில் நடப்பு நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி மாநிலத்தில் வரி வருவாய்  குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

2018 - 19 -ம் ஆண்டு வரவு செலவுக்கான கணிப்புகளில் மொத்த வருமானம் 1 லட்சத்து 81 ஆயிரத்து 322 கோடியாக கணிக்கபட்ட வருமானம்  திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி   1 லட்சத்து 80 ஆயிரத்து 618 கோடியாக குறைந்துள்ளது. இது வரிகள் மூலமும், வரி அல்லாதவை மூலம் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து  பெறும் நிதி ஆதாரங்கள்  53 ஆயிரத்து 283 கோடியாக  இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிதி ஆதாரம்  55 ஆயிரத்து 740 கோடியாக உயந்துள்ளது. இந்த நிதி ஆதாரம்  பங்கிடப்பட்ட வரிகள் மற்றும் உதவி மானியத்தின் மூலம் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு...

தமிழ் மொழி வளர்ச்சிக்காக 2019-20 ஆண்டுக்கு 54 புள்ளி 76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  2018-19 ஆம் ஆண்டில் தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 5 புள்ளி 97 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய  நிதியமைச்சர் பன்னீர்செல்வம், உலக மொழிகளின் பட்டியலில் தமிழ்  மொழியை 14 வது நிலையிலிருந்து 10 வது நிலைக்கு உயர்நத்த பல்வேறு திட்டங்கள் செய்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார் ..  ஹார்வேர்டு  பல்கலைக் கழகத்தைத் தொடர்ந்து சர்வதேச பல்கலைக் கழகங்களிலும்  தமிழ் இருக்கை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

சுகாதாரத் துறை- முக்கிய அறிவிப்புகள் : 

உலக வங்கி கடன் உதவியுடன் 2 ஆயிரத்து 685 கோடியே 91 லட்சம் செலவில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 -2020 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்காக 12 ஆயிரத்து 563 கோடியே 83 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் முக்கிய உடற் பரிசோதனைகளை தொகுப்பாகக் கிடைப்பதை உறுதி செய்ய புதிய திட்டம் வகுக்கப்பட்டு, அதற்கு 247 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பெறு நிதியுதவி திட்டத்திற்கு 959 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா குழந்தைகள் நலப்பரிசுப் பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டங்கள், சானிட்டரி நாப்கின்கள் வழங்குவதற்கான மகளிர் சுகாதார திட்டம் போன்றவை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் 750 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவ மற்றும் செவிலியர் கல்லூரியை ஆயிரத்து 264 கோடி செலவில் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ள பிரதமருக்கு பட்ஜெட்டில் நன்றி தெரிவிக்கப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் பயனளிக்கும் வகையில் விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது. 
இதன் மூலம் , இயற்கை மரணம் மற்றும் விபத்தின் போது இழப்பீட்டு தொகை முறையே 2 லட்சம் மற்றும் 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டு திட்டத்திற்கு கட்டணத் தொகையாக 250 கோடி ரூபாயை தமிழக அரசு  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

"ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படும்"

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் சேதமடைந்த குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஒரு வீட்டுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம்  ரூபாய் வீதம் ஆயிரத்து 700 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 720 கோடி ரூபாய் தரும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ள தமிழக அரசு, மாநில அரசு பங்காக 980 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கஜா பாதிப்பு உடனடி நிவாரண பணிகளுக்காக மாநில அரசின் நிதியிலிருந்து 2 ஆயிரத்து 361 கோடியே 41 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்கீடு...

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மின்சார பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வளர்ச்சி வங்கி கடனுதவியுடன் 5890 கோடி ரூபாய் செலவில் புதிய தரத்திலான பேருந்துகளையும், 2 ஆயிரம் மின்சார பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதற்காக முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 - 2020 ஆம் ஆண்டில்  மாணவ, மாணவியருக்கான போக்குவரத்து பயண கட்டண சலுகைக்காக 766 கோடி ரூபாய் மற்றும் டீசல் மானியத்துக்காக 250 கோடி ரூபாய் என மொத்தம் 1297.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 - 20 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் எரிசக்தி துறைக்கு 18,560.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரையிலான 9 கிலோ மீட்டர் நீளமுள்ள முதற்கட்ட நீட்டிப்பு பணிகள் நிறைவு பெற்று அது 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மெட்ரோ பேருந்து பணிமனை வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு 1,031.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... 




Next Story

மேலும் செய்திகள்