சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ...

மழையின்மை, ஏரிகளில் நீர் இருப்புக் குறைவு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை உள்ளிட்ட காரணங்களால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
x
சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகள் விளங்குகின்றன. ஆனால், தற்போது அந்த ஏரிகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளன. குடிநீர் தேவை அதிகரிக்கும் அதேவேளையில், மறுபுறம் நீர் இருப்பும், ஆதாரமும் குறைந்துவருகிறது. கடந்த ஆண்டு இதேநாளில், ஏரிகளின் நீர்இருப்பு 4,897 மில்லியன் கனஅடியாக இருந்தது. ஆனால், தற்போது 1,273 மில்லியன் கனஅடியாக குறைந்துள்ளது.

வீராணம் ஏரியில், இருந்து 18 கோடி லிட்டரும் மீஞ்சூர், நெம்மேலியில் இருந்து கடல்நீர் சுத்தகரிப்பு மூலம் கிடைக்கும் 20 கோடி லிட்டரும் கிடைக்கின்றன. ஆனால், புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீர், கேன் வாட்டர், தனியார் தண்ணீர் லாரிகளின் குடிநீர் விநியோகம் நீங்கலாக சென்னையின் குடிநீர்த் தேவை நாளொன்றுக்கு 83 கோடி லிட்டராக உள்ளது. 

இதனிடையே 2018 ஆம் ஆண்டின் மழையளவு இயல்பைவிட 24% சதவிகிதம் குறைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆனால் தனியார் நிறுவனங்களின் அதிகளவு நீர் உறிஞ்சலே, குடிநீர் பற்றாக்குறைக்கு காரணம் என சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

எது எப்படி இருப்பினும் கொதிக்கும் வெயிலில் குடங்களை ஏந்தி, குடிநீருக்காக தெருவில் நிற்கும் சூழல் ஏற்படக் கூடாது என்பதுதான் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்