பணத்தை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகையை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் பொங்கல் பரிசுத் தொகையை வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்காததை கண்டித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.




டோக்கன் அடிப்படையில் பரிசுப் பொருள் விநியோகம்

அனைவருக்கும் ஓட்டுரிமை உள்ளதால், பொங்கல் பரிசு தொகை அனைவருக்கும் தர வேண்டும் என்று கூறியதுடன், பரிசுத் தொகை வாங்காமல் நகர மாட்டோம் என ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பரிசாக அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரொக்கம் வழங்க நீதிமன்றம் விதித்த தடையால் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், அனைவருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பும், ஆயிரம் ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டன. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ஓட்டுரிமை உள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும், நிறுத்தினால் இலவசங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் குறிப்பிட்டனர்.
பொங்கல் பரிசு அபகரிப்பு - அதிகாரிகள் விசாரணை

வெளியூர் சென்றவரின் கையெழுத்தை போலியாக போட்டு பொங்கல் பரிசை பெற்ற சம்பவத்தில், உணவு வழங்கல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த சைமன் பீட்டர் என்பவர், மகன் படிப்புக்காக வெளியூரில் தங்கியுள்ள தமது குடும்பத்தைப் பார்க்க அடிக்கடி சென்றுவருவது வழக்கம். அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில, அரசு வழங்கிய பொங்கல் பரிசு பெற்றதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில், ஆய்வு நடத்தியதில் போலி கையெழுத்திட்டு பொங்கல் பரிசு மோசடி செய்யப்பட்டுள்ள அம்பலமானது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
எவருக்கும் ரூ 1,000 பொங்கல் பரிசு இல்லை - பொய் தகவலால் ரேசன் கடை முன்பு கூடிய பொதுமக்கள்

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஒமலூர் அருகே பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட மாட்டாது என்ற பொய் தகவல் பரவியது. இதனையடுத்து தாத்தியம்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் அதிகளவில் கூடினர்.ஒரே நேரத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து ஊழியர்கள் ரேஷன் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பொங்கல் பரிசுத் தொகையான ஆயிரம் ரூபாய்க்கு, உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அது குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என, அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சிவகாசியில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது பொங்கல் பரிசு அனைவருக்கும் வழங்கப்படும் என்றார்.
Next Story

