தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது?

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது என்பதை விவரிக்கிறது, இந்த சிறப்பு பார்வை
x
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல் எந்த அளவில் உள்ளது என்பதை விவரிக்கிறது, இந்த சிறப்பு பார்வை.

பிளாஸ்டிக் பொருட்களின் தடை காரணமாக உணவகங்களில் பார்சலுக்கு தனிக் கட்டணம் வசூலிக்க உள்ளதாக சென்னை ஓட்டல் உரிமையாளர்கள் சங்க  செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 

நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கறிக் கடைகளில் பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக பனை ஓலைப்பெட்டி, வாழை இலைகளில் கட்டி மாமிசம் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கூடுதல் செலவாவதாக கறிக்கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

இதேபோல், நெல்லை வண்ணாரப்பேட்டை டீக்கடை ஒன்றில் பார்சல் டீ, காபி  எடுத்து செல்ல தூக்கு வாளி வழங்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் வைப்புத் தொகையாக 150 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தூக்கு வாளியை திரும்ப அளிக்கும் போது வைப்புத்தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கோவை ராஜவீதியை அடுத்த டி.கே மார்க்கெட் பகுதியில் உள்ள  பெரும்பாலான கடைகளில் பொருட்களை விநியோகம் செய்ய பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, காகித பைகளை வியாபாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.  தங்களுக்கு இது எளிதாக இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொட்டலம் கட்ட பயன்படுத்திய காகிதங்களை, மீண்டும் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மீறி பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்,  பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக்கால் ஆன குடிநீர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி  பாட்டில்களும், கேனில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களும் விற்பனைக்கு வந்துள்ளன. 
கண்ணாடி பாட்டில்கள் 10 ரூபாய்க்கும், கேனில் அடைக்கப்பட்ட குடிநீர் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், பார்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் வாழை இலை, தொன்னை உள்ளிட்டவைகளில் விநியோகம் செய்யப்படுகின்றன.  இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்