புயலுக்கு பிறகு புத்துயிர் பெறும் தனுஷ்கோடி...

1964ம் ஆண்டு வீசிய புயல் காற்றால் சிதைந்து காணாமல் போன தனுஷ்கோடி, மத்திய மாநில அரசுகளின் முயற்சியால் 50 ஆண்டுகளுக்கு புத்துயிர் பெற்று வருகிறது.
x

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய பொன்விழா ஆண்டான 1964ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அன்று, தனுஷ்கோடியை கடுமையான புயல் ஒன்று தாக்கியது. ரயில் நிலையத்திலும் துறைமுகத்திலும் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் சூறாவளிக் காற்றினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

தனுஷ்கோடி அருகே நிறுத்தப்பட்டு இருந்த போர்ட் மெயில் ரயிலும் புயல் காற்றுக்கு இரையானது. அதில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்த தனுஷ்கோடி நகரம் ஒரோ நாள் இரவில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. தனுஷ்கோடியில் இருந்த பெரிய பெரிய கட்டடங்கள், பிள்ளையார் கோயில், சர்ச், இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் என அனைத்தும் தரை மட்டமாயின. 

பெரிய வர்த்தக ஸ்தலமாக இருந்த தனுஷ்கோடி, அதன்பிறகு தனித்து விடப்பட்டது. மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர் வசதி என எந்த அடிப்படை வசதியும்  இல்லாமல் சுமார் 200  மீனவ குடும்பங்கள் மட்டும் அங்கு வாழ்ந்து வருகின்றன. தனுஷ்கோடியை, புயல் தாக்கி அரை நூற்றாண்டு கழிந்த நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகளின் கவனம் தனுஷ்கோடியை நோக்கி திரும்பியுள்ளது.

ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரையிலும் 65 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தேசிய நெடுஞ்சாலை காரணமாக அப்பகுதி மக்கள் பயன் பெறத்தவங்கியுள்ளனர். புதிய சாலை திறந்த பின்னர் தனுஷ்கோடி மற்றும் அரிச்சல்முனை பகுதிகளுக்கு அரசு பேருந்தும் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளும் தங்களுடைய வாகனங்களில் அரிச்சல் முனை வரை  செல்ல முடிகிறது. ஆள் நடமாட்டம் இன்றி காணப்பட்ட தனுஷ்கோடி பகுதி இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.  

தனுஷ்கோடி அருகே கலங்கரை விளக்கம் அமைக்கப்பட உள்ளதாகவும் அது சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் எனவும் சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 1964 புயலால் சேதமடைந்து இன்று வரையுள்ள பழைய கட்டடங்களையும் பழமை மாறாமல் பராமரித்து தனுஷ்கோடியை யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்