3 நாள் ஜவுளி கண்காட்சி தொடக்கம் : அமைச்சர்கள் பார்வையிட்டனர்...

ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில், மொத்த கொள்முதல் ஜவுளி கண்காட்சி தொடங்கியது.
x
ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில், மொத்த கொள்முதல் ஜவுளி கண்காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், தமிழகம் - கேரளம் - ஆந்திரா - கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 750  ஜவுளி நிறுவனங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. நேற்றைய நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், சம்பத், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். 

"12ஆம் வகுப்பில் 'ஸ்கில் டிரைனிங்' பாடத்திட்டம்"

கண்காட்சியில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், 'ஸ்கில் டிரைனிங்' பாடத்தை 12ஆம் வகுப்பில் சேர்ப்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். திமுக ஆட்சியின்போது, கொண்டு வரப்பட்ட, அண்ணா 
நூலகங்களில் சிறப்பாக செயல்படும் நூலகங்களை தொடர்ந்து செயல்படச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார். 

"2023ஆம் ஆண்டுக்குள் 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி"

ஜவுளி கண்காட்சியில் பங்கேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்குள் 4 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். விளை நிலங்கள் வழியாக மின் பாதை அமைக்கும் போது சில அரசியல் கட்சிகளும் சில விவசாய அமைப்புகளும் போராட்டத்தை தூண்டி விடுவதாகவும், மின்கோபுர லைன் குறித்து விவசாயிகளுடன் பேசப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  

"தமிழகத்தை உலக நாடுகள் விரும்புகின்றன"

ஈரோட்டில் நடைபெறும் ஜவுளி கண்காட்சியில் பங்கேற்ற பிறகு, தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்,  வருகிற ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், கடந்த மாநாட்டை விட அதிக முதலீடு பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைத்து வருவதாக தெரிவித்தார். சீனாவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மனிதவள திறமைகள் உள்ளதால் உலக நாடுகள் தமிழகத்தை விரும்புவதாகவும், தமிழகத்தில் தொழில் தொடங்க 350 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு  சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்