தமிழிலும் , இயற்கை விவசாயத்திலும் அசத்தும் ஆங்கிலேயர் கிருஷ்ணா

விவசாயம் மீது அளவு கடந்த விருப்பம் கொண்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த டங்கன் மைக்கென்சி புதுச்சேரிக்கு வந்து கிருஷ்ணாவாக மாறி இயற்கை விவசாயத்திலும் அசத்தி வருகிறார்.
x
புதுச்சேரி ஆரோவில் பகுதியில் இருக்கும் வெளிநாட்டவர்களில் ஒருவர் மட்டும் மற்றவர்களை காட்டிலும் சற்று வித்தியாசப்பட்டு தெரிகிறார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இவர் வயலில் இறங்கி வியர்வை சிந்த வேலை பார்ப்பதை பார்க்கும் நமக்கு ஆச்சரியம் தான்.

தனது 19 வது வயதில் இங்கிலாந்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்த டங்கன் மைக்கென்சியின் எண்ணமெல்லாம் விவசாயம் நோக்கியே இருந்திருக்கிறது. மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்ட இவர், விவசாயத்தை கையில் எடுத்தார். மேலும் தமிழ் கலாச்சாரம் மீதான விருப்பத்தால் தன் பெயரையே கிருஷ்ணா என மாற்றிக் கொண்டார். 26 வருடங்களாக இயற்கையோடும் தமிழோடும் இணைந்து வாழும் இவர், தமிழில் சரளமாகவே பேசி அசத்துகிறார். 

புதுச்சேரி பகுதியில் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அதனை இன்று வரை திறம்பட செய்து வருகிறார். வெளிநாட்டு காய்கறிகளை விரும்பி வாங்குவோர் மத்தியில் நம் மண்ணுக்கும், நமக்கும் நல்லதை செய்யும் பாரம்பரிய காய்கறிகளை விளைவிக்கிறார் கிருஷ்ணா.

இவரது தோட்டத்தில் சுண்டைக்காய், கருணைக்கிழங்கு, எலுமிச்சை போன்ற நம் நாட்டு காய்கறிகளும், முடக்கத்தான், கீழாநெல்லி, திப்பிலி போன்ற மூலிகை செடிகள் என மொத்தம் 140 வகையான பயிர்கள் விளைவிக்கப்படுகிறதாம். ஆரம்பத்தில் தன் தேவைக்கு காய்கறிகளை பயன்படுத்தி வந்த கிருஷ்ணா, அதை மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக 2006 ஆம் ஆண்டு இயற்கை உணவகம் மற்றும் அங்காடி ஒன்றை திறந்தார்.

விதவிதமான கீரைகளை கொண்டு சாம்பார், கூட்டு, பொரியல் என நம் தமிழ் உணவுகளை சமைத்து வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்ப்பதில் கைதேர்ந்தவர் ஆகிவிட்டார் இந்த இங்கிலாந்து கிருஷ்ணா. தீபா என்ற பெண்ணை மணமுடித்துள்ள இவர், இயற்கை விவசாயம் குறித்து மாணவர்கள், வெளிநாட்டவர்கள் என அனைவரிடமும் பேசி வருகிறார். ஓய்வு நேரங்களில் இசைக்கருவிகள் வாசிப்பதோடு, கூடவே தமிழ் பாடல்களை பாடியும் தன்னை உற்சாகப்படுத்திக் கொள்கிறார்.

தன் வாழ்நாளின் பெரும்பாலான நேரங்களை வயலில் செலவழித்துள்ள இவர் முழுமையான மனநிறைவை தரும் தொழில் இது என்கிறார் பெருமையாக.... இவரது உணவகத்தில் இயற்கையான ஜூஸ் வகைகள், கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் கொண்டு செய்யப்பட்ட உணவுகள் என எல்லாம் கிடைக்கிறது.

வெளிநாட்டு உடை, வெளிநாட்டு உணவுகள் என தேடி செல்வோர் மத்தியில் உணவளிக்கும் மண்ணுக்கு மரியாதை செலுத்தும் கிருஷ்ணா நிச்சயம் பாராட்டுக்குரியவரே. 

Next Story

மேலும் செய்திகள்