சிலை கடத்தல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு...

சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
சிலை கடத்தல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு...
x
தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி கடந்த ஆகஸ்ட் மாதம்  தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து,  அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு விசாரணை அதிகாரியாகவும் நியமித்தும் உத்தரவிட்டது. அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும், பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்ததை செல்லாது என்று அறிவிக்க கோரியும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.  தமிழக அரசின் கொள்கை முடிவினை பொதுநல வழக்கு மூலம் ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ஏற்புடையதல்ல என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் வழக்குகளில் நாடு முழுவதும் மற்றும்  சர்வதேச அளவில் தொடர்புகள் இருப்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டதாகவும், இது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்