தீபாவளிக்கு தயாராகும் செட்டிநாட்டு பலகாரங்கள்
தீபாவளி பண்டிகைக்காக ஆற்காடு மக்கன் பேடா தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
பண்டிகையை வண்ண மயமாக்கும் உடைகள் ஒருபக்கம் இருந்தாலும் விழாக்களுக்கு கூடுதல் சிறப்பை தருவது இனிப்புகள் தான். விதவிதமான இனிப்புகளை தயாரித்து மற்றவர்களுக்கு கொடுத்து மகிழவே உருவாக்கப்பட்ட பண்டிகைகளும் உண்டு. அந்த வரிசையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ஆற்காடு மக்கன் பேடா தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இனிப்பில் சற்று வித்தியாசமான சுவை உடையதாக இருக்கும் மக்கன் பேடாவை தயாரிக்கும் பணியில் வேலூரில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். 200 ஆண்டுகளுக்கு முன் நவாபுகள் ஆட்சி செய்த காலத்தில் தமிழகத்திற்கு அறிமுகமானது தான் இந்த மக்கன் பேடா. ஒருமுறை நவாபு கொடுத்த விருந்தில் பரிமாறப்பட்ட மக்கன் பேடாவின் ருசியை பார்த்த ஆற்காடு வாசிகள் அதன் செய்முறையை தெரிந்து கொண்டு தயாரிக்க தொடங்கி உள்ளனர். இப்படியாக தமிழகத்திற்குள் நுழைந்த மக்கன் பேடா, இன்று பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாகவே இருக்கிறது.
இதற்கு நவாப் பேடா என்ற பெயரும் உண்டு. பாதாம், பிஸ்தா,முந்திரி, நெய் என ஒவ்வொன்றையும் சம அளவில் எடுத்து அத்துடன் மைதா போன்ற பொருட்களை பக்குவமாக கலந்து எண்ணெயில் சிவக்க வறுத்தெடுத்து பின்னர் அதனை சர்க்கரை பாகில் ஊற வைக்கிறார்கள். ஒரு மணி நேரம் வரை சர்க்கரை பாகில் ஊறிய அந்த இனிப்பு நாவில் நீர் ஊற வைக்கும் ஒரு பதார்த்தமாகவே மாறிப் போகிறதாம்.
கிட்டத்தட்ட குலோப் ஜாமூன் போன்றே தோற்றமளிக்கும் இந்த மக்கன் பேடா ருசியில் சற்று மாறுபட்டு இருக்கிறது. காரணம் இதில் சேர்க்கப்படும் பாதாம், பிஸ்தா போன்ற பொருட்கள் மக்கன் பேடாவை தொடர்ந்து சாப்பிட வைக்கும் அளவிற்கு ருசியில் தனித்து நிற்கும். இந்த மக்கன் பேடா 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் தன்மை கொண்டது என்பதால் தீபாவளி பண்டிகைக்கு இதனை ஆர்டர் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் மக்கன் பேடா ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதால் அவற்றை தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Next Story