துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்டத்தில் அதிரடியாக பல மாற்றங்களை கொண்டு வருவதோடு, முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தக்க வைத்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ்.
துணிச்சலாக செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
x
தாமிரபரணி கரைபுரண்டு ஓடும் நெல்லை மண்ணுக்கு பல சிறப்புகள் உண்டு. அத்தகைய பெருமைகளில் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தந்திருக்கிறார் ஷில்பா பிரபாகர் சதீஷ். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஷில்பா கடந்த 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 46வது இடம் பிடித்தார். 

இதையடுத்து 2010 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியமர்த்தப்பட்ட ஷில்பா, அதன்பிறகு திருப்பத்தூர் சார் ஆட்சியராக 3 ஆண்டு காலம் பணிபுரிந்தார். 2015 ஆம் ஆண்டு தொழில் துறையில் தொழில் வழிகாட்டல் பிரிவில் நிர்வாக தலைவராக பணியில் இருந்த அவர் கடந்த மே மாதம் நெல்லை மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர்களாக இதுவரை ஆண்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக இந்த மாவட்டத்துக்கு ஒரு பெண் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வந்தார் ஷில்பா.. பணியில் சேர்ந்த 3 வது நாள் கங்கை கொண்டான் தொழில் பூங்காவில் 200 கோடி மதிப்பிலான உணவு பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் அவர், சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்கப்படும் துணிப்பைகளை சொந்தப்பணத்தில் வாங்கி மக்களுக்கு வழங்கி வருகிறார். மாற்றுத் திறனாளிக்கென தனி குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்துகிறார் ஷில்பா பிரபாகர்.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற போதிலும் மருத்துவ படிப்பில் சேர பணமில்லாமல் தவித்த துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு கல்விச் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டார் ஷில்பா. கிராமங்களுக்கு அவ்வப்போத ஆய்வுக்கு செல்லும் ஆட்சியர் ஷில்பா அங்கு மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் சரிசெய்து கொடுத்தார். 

ஷில்பாவின் துணிச்சலும், தனித்துவமும் விநாயகர் ஊர்வலத்தின் போது தான் வெளிப்பட்டது. மோதலுக்கு காரணமாக இரு தரப்பையும் அழைத்து பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்து வைத்தார். தற்போது ஷில்பா பிரபாகர் முன் சவாலாக நிற்பது தாமிரபரணி புஷ்கரம் விழா. முதலில் தடை, பிறகு எங்கெல்லாம் தடை என பயணிக்கும் புஷ்கரத்தையும், அசம்பாவிதங்கள் நடக்காமல் கவனமாக கையாள்வார் என்பது நெல்லை மக்களின் நம்பிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்