தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையின் மூலம், தூத்துக்குடியில் மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது.
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல - தமிழக அரசு வழக்கு
x
தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர்  மாசு குறித்து மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் அண்மையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடி நகரில் நிலத்தடி நீர் மாசு அடைய ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்கு, தடைவிதிக்க  கோரி தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா, நீதிபதி பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து மத்திய நிலத்தடி நீர் வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக 
தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே முழு அளவில் ஆய்வு நடத்தி நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு  ஸ்டெர்லைட் நிறுவனம் தான் காரணம் என்பதால், அதை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், இது தொடர்பான வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கும் நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. 

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில்  வன்முறை ஏற்பட்ட நிலையில் இந்த அறிக்கையால்  தூத்துக்குடியில் மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின்  மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்