துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு புகார் : சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது திமுக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு புகார் : சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது?
x
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக திமுக அமைப்பு செயலாளர்  ஆர்.எஸ்.பாரதி, லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த மார்ச் 10ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்  மனுத் தாக்கல் செய்தார். மனுவில், வருமானம் குறித்து  தவறான தகவல்களை வேட்புமனுவில் பன்னீர் செல்வம் கொடுத்திருப்பதாகவும், சேகர் ரெட்டியின் டைரியில் 4 கோடி ரூபாய் பணம் பெற்றதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 
இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகார் அளித்து 3 மாதங்களான நிலையில்,  எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். வருமான வரி சோதனையின்போது, சேகர் ரெட்டியிடம் சிக்கிய டைரியில் பன்னீர்செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி,   சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.  வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் சொத்து விவரங்கள் :

கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், 5 லட்சத்து 80 ஆயிரத்து 875 ரூபாய் ஆண்டு வருமானம் கிடைப்பதாகவும், தனது மனைவி விஜயலட்சுமிக்கு 46 லட்சத்து 33 ஆயிரத்து 742 ரூபாய் ஆண்டு வருமானம் கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி நிலவரப்படி தன்னிடம், இரண்டு கார்கள், 16 கிராம் நகைகள், கையில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் என மொத்தம்  33 லட்சத்து 20 ஆயிரத்து 529 ரூபாய் அளவிற்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாக பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதேபோல, தனது மனைவி விஜயலட்சுமியின் பெயரில் 22 லட்சத்து 44 ஆயிரத்து 545 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல, தனது பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் இருப்பதாகவும் தெரிவித்த பன்னீர் செல்வம், வங்கிகளில் 25 லட்சத்து 734 ரூபாய் கடன் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


 




Next Story

மேலும் செய்திகள்