தென்னை மரத்தில் இருந்து சர்க்கரை - விவசாயத்தில் புதுமை புகுத்தி வரும் விஞ்ஞான விவசாயி

புத்திசாலித்தனமாக சிந்தித்தால், விவசாயத்தில் நஷ்டம் ஒருபோதும் ஏற்படாது... தென்னை விவசாயத்தில் புதுமை புகுத்தி, விஞ்ஞான விவசாயியாக வலம் வரும், பாலகிருஷ்ணனின் கூற்று இது... அவரை பற்றியும், அவரது புதுமை முயற்சி பற்றியும் பார்ப்போம்...
தென்னை மரத்தில் இருந்து சர்க்கரை - விவசாயத்தில் புதுமை புகுத்தி வரும் விஞ்ஞான விவசாயி
x
தென்னை மரத்தில் இருந்து சர்க்கரை



தென்னை மரத்தின் பலன்கள் என்றாலே, தேங்காய், இளநீர், ஓலை, அதையும் தாண்டி சிந்தித்தால், கள், பதநீர் இவை தான் நினைவுக்கு வரும். இவை எல்லாவற்றையும் விட கொள்ளை லாபம் தரக்கூடிய பல பொருட்கள் தென்னை மரத்தில் ஒளிந்து கிடக்கின்றன... அதற்கு உதாரணம் தான் தென்னை சர்க்கரை மற்றும் நீராபானம். இதனை கேட்கும்போது அனைவர் மனதிலும் எழும் கேள்வி... தென்னையில் இருந்து சர்க்கரையா...? என்பது தான்... விவசாயி பாலகிருஷ்ணன் இந்த புதுமை முயற்சியை தொடங்கிய போது, எழுந்த ஏளன கேள்விகள் பலவற்றிற்கு தனது வெற்றி மூலம் பதிலடி கொடுத்துள்ளார். சத்தியமங்கலம் அருகே உள்ள திம்மநாயக்கன் புதூரில் ஆயிரத்து 700 தென்னை மரங்களுக்கு சொந்தக்காரர் விவசாயி பால கிருஷ்ணன். இதில் 70 மரங்களில் நீரா பானம் தயார் செய்து வருகிறார். நீராபானம் தயாரிக்க இவர் மேற்கொள்ளும் வழிமுறைகளை பார்த்தால்,  இவர் விவசாயியா, விஞ்ஞானியா என்ற கேள்வி எழுகின்றது. முதலில் இதற்காக தெர்மாகோலால் ஆன குடுவைகளை பிரத்யேகமாக தயார் செய்யப்படுகிறது. அதில் நொறுக்கப்பட்ட பனிக்கட்டிகள் நிரப்பப்படுகிறது. பின்னர்  சீவப்பட்ட தென்னம்பாளையில் அந்த குடுவை பொருத்தப்படுகிறது. குடுவையில் இருக்கும் பனிக்கட்டிகள், சேகரிக்கப்படும் நீராபானம் புளிப்படையாமல் இருக்க உதவுகின்றன. 



ஒரு தென்னை மரத்தில், நாள்தோறும் 2 லிட்டர் நீராபானம் பெறப்படுகிறது. இதனை காய்ச்சுவதன் மூலம் பெறப்படும் சர்க்கரையை, சர்க்கரை நோயாளிகளும் பயன்படுத்தலாம் என்பதால், பொதுமக்களிடயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த சர்க்கரை பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அருமருந்தாக பயன்படுவதாக என விவசாயிகள் கூறுகின்றனர். இந்த தென்னை சர்க்கரை தான், பாலகிருஷ்ணனின், வெற்றியின் ரகசியம். பெறப்படும் நீராபானம், ஈரோடு, கோவை, திருப்பூர், என பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. நீரா பானம் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது, தென்னை சர்க்கரையோ, ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒவ்வொரு தென்னையில் இருந்தும் பத்து மடங்கு லாபம் கிடைப்பதாக கூறும் விவசாயி பால கிருஷ்ணன் தன்னை நாடி வரும் விவசாயிகளுக்கு லாபம் ஈட்ட சில அறிவுரைகளும் கூறிவருகிறார்.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் புத்திசாலித்தனம் இருந்தால் விவசாயத்தில் சாதிக்கலாம் என்ற விவசாயி பாலகிருஷ்ணனின் கூற்று சரியாகவே தோன்றுகிறது...

விவசாயி பாலகிருஷ்ணனை தொடர்பு கொள்ள - 98422 22895



Next Story

மேலும் செய்திகள்