பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், பதிவான வழக்குகளில் தண்டனை விகிதங்களும் குறைந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் என்ன?.
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் விவரம்
x
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2016ம் ஆண்டை விட, 2017-ம் ஆண்டு குறைந்துள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 2016 ல் 11 ஆயிரத்து 625 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2017 ல் 10 ஆயிரத்து 677 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஆயிரம் வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ள நிலையில், தண்டனை விகிதாச்சாரத்தை பார்க்கும் போது, மிகக் குறைவாகவே உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 

2016ம் ஆண்டு சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை உள்ளிட்ட ஏழு பெருநகரங்களில் பதிவான 1,432 வழக்குகளில், 26 தண்டனையிலும், 178 வழக்குகள் விடுதலையில் முடிவடைந்துள்ளன.

சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டலத்தில் பதிவான 1,385 வழக்குகளில் 66 தண்டனையிலும்,163 வழக்குகள் விடுதலையிலும் முடிவடைந்துள்ளன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலத்தில் பதிவான 2,184 வழக்குகளில், 40 தண்டனையிலும், 260 வழக்குகள் விடுதலையிலும் முடிவடைந்துள்ளன. 

திருச்சி, கரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் அடங்கிய மத்திய மண்டலத்தில் பதிவான 1,023 வழக்குகளில் 57 தண்டனையிலும், 181 விடுதலையிலும் முடிவடைந்துள்ளன.
 
மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் அடங்கிய தெற்கு மண்டலத்தில் பதிவான 5,578 வழக்குகளில், 63 தண்டனையிலும், 459 வழக்குகள் விடுதலையிலும் முடிவடைந்துள்ளன.

மொத்தமாக, 2016ம் ஆண்டு பதிவான 11 ஆயிரத்து 625 வழக்குகளில் 257 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,244 வழக்குகள் விடுதலையில் முடிந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2017 ம் ஆண்டு பெருநகரங்களில் 1,338 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 10 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், 18 வழக்குகள் விடுதலையில் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்தில் பதிவான 2,321 வழக்குகளில், 18 தண்டனையிலும், 136 வழக்குகள் விடுதலையிலும் முடிவடைந்துள்ளன. 

மேற்கு மண்டலத்தில் பதிவான1,169 வழக்குகளில்,19 வழக்குகள் தண்டனையிலும், 35 வழக்குகள் விடுதலையிலும் முடிந்துள்ளன. இதேபோல, தெற்கு மண்டலத்தில் பதிவான 4,669 வழக்குகளில், 41 வழக்குகள் தண்டனையிலும், 95 வழக்குகள் விடுதலையிலும் முடிவடைந்துள்ளன. 

2017 ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்து 677 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதில், 121 வழக்குகள் மட்டும் தண்டனையில் முடிவடைந்துள்ளதாகவும், 366 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை  செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது அந்த அறிக்கை.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், தண்டனை விகிதமும் குறைந்திருப்பது அதிர்ச்சியை தரும் வகையில் உள்ளது. தண்டனை விகிதம் குறையக் காரணம் என்ன? விடுதலை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன? நீதிமன்றங்களில் வழக்குகளை காவல் துறையினர் முறையாக நடத்துவதில்லையா? என்பன போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

பாலியல் வழக்குகளில் பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும், எங்கு புகார் அளிக்க வேண்டும் என்பது குறித்து  பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தளங்களிலும் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிறார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி.


Next Story

மேலும் செய்திகள்