ஐ.பி.எல் இறுதி போட்டி : 4 வது முறையாக மும்பை அணி கோப்பையை வென்று சாதனை

1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி
ஐ.பி.எல் இறுதி போட்டி : 4 வது முறையாக மும்பை அணி கோப்பையை வென்று சாதனை
x
ஐ.பி.எல் இறுதி போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை அணி, இறுதி பந்து வரை போராடி, யாரும் எதிர்பார்க்காத விதமாக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. 

ஐதரபாத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து. அதன் படி முதலில் களமிறங்கிய மும்பை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த‌து. பொல்லார்டு மட்டும் 41 ரன்கள் எடுக்க, மற்ற வீர‌ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 149 ரன்கள் குவித்த‌து. இதையடுத்து 150 ரன்களை இலக்காக கொண்டு களமிறிங்கிய சென்னை அணியில், தொடக்க‌ ஆட்டக்கார‌ர் வாட்சன் 80 ரன்கள் குவித்தார். ஆனால் மற்ற வீர‌ர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இந்த நிலையில், குருனால் பாண்டியா வீசிய 18 வது ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்க விட்ட வாட்சன், சென்னை அணி ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார். இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில்,  வாட்சன் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, இறுதி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், மலிங்கா வீசிய பந்தில், தாகூர் LBW முறையில் அவுட் ஆனார். இதனால் மும்பை அணி, 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

மும்பை மற்றும் சென்னை அணிகள் மூன்று முறை சாம்பியன் பட்டம் பெற்றிருந்த நிலையில்,  இந்த வெற்றி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி  நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது  இதனால் ஐபிஎல் போட்டிகளில், அதிக முறை கோப்பையை கைப்பற்றிய அணி என்ற பெருமையை மும்பை அணி, தனதாக்கிகொண்டுள்ளது. வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி ரூபாயும், சென்னை அணிக்கு, 12.5 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வென்ற பும்ரா 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை தட்டி சென்றுள்ளார். சூப்பர் ஸ்ட்ரைக்கராக தேர்ந்தெடுக்கப்பட்ட கொல்கத்தா அணி வீர‌ர் ரசுல், காரை பரிசாக வென்றார்.


Next Story

மேலும் செய்திகள்