இந்தி மொழி விவகாரம் : அமித்ஷா விளக்கம்
இந்தி மொழி தொடர்பாக தமது பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அனைவரின் 2-வது மொழி, இந்தியாக இருந்தால் நன்றாக இருக்கும் என மட்டுமே தாம் கூறியதாக அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.
ஒரே தேசம் - ஒரே மொழி என்ற பாஜகவின் முழக்கத்திற்கு, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடு தழுவிய அளவில் சர்ச்சை எழுந்ததால், இந்தி விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, தாம் வெளியிட்ட கருத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில், ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என தாம் கூறவில்லை என தனியார் தொலைக்காட்சி பேட்டியில் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார்.
தாய்மொழியை தாண்டி, வேறு மொழியை படிப்பதாக இருந்தால், அது இந்தி ஆக இருக்க வேண்டுமென தாம் பேசிய பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.
நமக்கு கட்டாயமாக ஒரு பொது மொழி தேவை என கூறிய அமித்ஷா, அது இந்தியாக இருக்கலாம் என தெரிவித்ததாக, தமது பேச்சை நினைவு கூர்ந்தார்.
அனைத்து மாநில மொழிகளும் வலுப்பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2- வது மொழி ஒன்றை கற்க வேண்டும் எனில், இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என தாம் கூறியதாகவும், தாமே, இந்தி அல்லாத குஜராத்தில் இருந்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில், சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
எப்போதும் சொல்வது போல், இந்திய மொழிகளை வலிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், தனது தாய் மொழியில் படிக்கும் போது தான், ஒரு குழந்தையால் நன்றாக படிக்க முடியும் என கூறினார்.
மொழிகளை வலிமைப்படுத்த தவறினால், ஆஸ்திரேலியா , நியூசிலாந்து போல் நமது மொழி எது? என்று தெரியாமல் போகும் என அமித்ஷா தமது கவலையையும் இந்த பேட்டியில், பதிவு செய்தார்.
அமித்ஷாவின் இந்த விளக்கம், தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனிடையே, " இந்தி திணிப்பு " என குரல் எழுப்பிய திமுக, தனது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது.
Next Story