ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
x
ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. வரும் 26 ம் தேதி, மீண்டும் ப. சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். 

ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவின் பிடி இறுகி, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.  தலைநகர் டெல்லியில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், ரோஸ் அவின்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சிபிஐ சார்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் துஷார் மேத்தா, வழக்கு விசாரணைக்கு ப. சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார். ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான கூட்டுச் சதியில் ப. சிதம்பரத்திற்கு பங்கு உள்ளதாக வாதிட்ட துஷார் மேத்தா, விரைவில் குற்றப்பத்திரிகையில், ப. சிதம்பரத்தின் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். 

ப. சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சிபிஐ கூறுவது எல்லாம் வேத வாக்கு அல்ல என்று வாதிட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டிய கபில்சிபல், சிபிஐ கேட்ட 12 கேள்விகளில், 6 கேள்விகளுக்கு ப. சிதம்பரம் பதில் அளித்து விட்டார் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு, ஆதாரங்கள் அடிப்படையில் நடக்கவில்லை - வேறு எதற்காகவோ
நடத்தப்படுவதாக கபில்சிபல் வாதிட்டார். 

மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, முதலீடு குறித்து, வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் தான் முடிவு எடுத்ததாகவும், இதற்கு ப. சிதம்பரம் ஒப்புதல் மட்டுமே அளித்ததாகவும் விளக்கம் அளித்தார். சிபிஐக்கு ப.சிதம்பரத்தின் பதில் தேவை இல்லை - அவர்கள் எதிர்பார்க்கும் பதில்கள் தான் தேவை என்று குறிப்பிட்ட அபிஷேக் சிங்வி, நீதிபதியே, தேவையான கேள்விகளை கேட்கலாம் என வாதிட்டார். நீதிமன்றத்தில் பேச, ப. சிதம்பரம் அனுமதி கேட்டபோது, சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். 

தனது மகன், ரிசர்வ் வங்கி அனுமதி பெற்று வெளிநாட்டு கணக்கு வைத்துள்ளதாகவும், தன்னைப் பொறுத்தவரை, வெளிநாட்டு வங்கிகளில் எந்த கணக்கும் கிடையாது என்றும் ப. சிதம்பரம் திட்டவட்டமாக விளக்கம் அளித்தார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய்குமார்,  சிபிஐ யின் கோரிக்கையை ஏற்று, ப. சிதம்பரத்தை வருகிற 26 ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கொடுத்தார். வருகிற 26 ம் தேதி, ப. சிதம்பரத்தை மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி அஜய்குமார் உத்தரவிட்டார்.

மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை சுமார் 4 மணி நேரம், சிபிஐ நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம் நடந்தது. நீதிபதி உத்தரவை தொடர்ந்து, வெள்ளை நிற காரில், ப. சிதம்பரம், பலத்த பாதுகாப்புடன் டெல்லி - சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். ப. சிதம்பரம் வழக்கு, தேசிய அளவில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.







Next Story

மேலும் செய்திகள்