மீண்டும் பிரதமர் ஆகிறார், நரேந்திரமோடி : மே 26 - ல் குடியரசு தலைவருடன் சந்திப்பு

மக்களவை தேர்தலில், பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து நரேந்திரமோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்.
மீண்டும் பிரதமர் ஆகிறார், நரேந்திரமோடி : மே 26 - ல் குடியரசு தலைவருடன் சந்திப்பு
x
மக்களவை தேர்தலில், பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, நரேந்திரமோடி, மீண்டும் பிரதமர் ஆகிறார். வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவு பெறவில்லை என்ற போதிலும், கடைசியாக கிடைத்த தகவல்படி, பாஜக 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எனவே, தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை தாண்டி, கூடுதல் இடங்களை பாஜக கைப்பற்றுவது உறுதியாகி விட்டது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த மாலை வேளையில், பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தலைவர் அமித்ஷா சகிதமாக, டெல்லி பாஜக அலுவலகத்திற்கு வந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு,அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்திக்கு பிறகு, மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, 2 -வது முறையாக தொடர்ந்து, ஆட்சிக்கு வரும் 3- வது பிரதமர் என்ற பெருமையை நரேந்திரமோடி பெற்றுள்ளார். 26 ம் தேதி, குடியரசு தலைவரை சந்திக்கும் பிரதமர் நரேந்திரமோடி, மீண்டும் பிரதமர் பதவியேற்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

பாஜக வெற்றி : தொண்டர்கள் கொண்டாட்டம் :

மக்களவை தேர்தலில் பாஜக , இமாலய வெற்றி செய்தி வெளிவந்ததும், புதுடெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்  தொண்டர்கள், கொடியுடன் பெருமளவில் குவிந்தனர். வீதியில் ஆடிப்பாடி, பாஜக தொண்டர்கள், ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் :

இதேபோல, பெங்களூரு, மும்பை மற்றும் வாரணாசி உள்ளிட்ட நகரங்களிலும் கொண்டாட்டங்கள் களை கட்டின. வீதிகளில் ஆடிப்பாடிய பாஜக தொண்டர்கள், மக்களுக்கு ம் இனிப்பு விநியோகித்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

பாஜக, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி  - அமித்ஷா

மக்களவை தேர்தலில் பாஜக, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளதாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில், பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட கூட்டத்தில் பேசிய அவர், இந்த மாபெரும் வெற்றியை 11 கோடி தொண்டர்களுக்கு சமர்ப்பணம் செய்வதாக குறிப் பிட்டார். 17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் மேலாக வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அமித்ஷா, எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியலுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர் என்றார்.15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி கூட கிடைக்கவில்லை என்று அமித்ஷா தெரிவித்தார்.

உலக நாடுகளின் தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து :

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஜப்பான் பிரதமர் அபே ஷின்சோ,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே,மாலத்தீவு அதிபர் இம்ராஹிம் மொஹமத், போர்ச்சுக்கல் பிரதமர் அன்டானியோ கோஸ்தா, பூட்டான் பிரதமர் லொடாய் செரிங்ஸ், நேபாளம் பிரதமர் சர்மா ஒலி, தானன்சானிய அதிபர் ஜான் மெகுஃபுலி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வியட்நாம் பிரதமர் கூயுங் சுவாங் மற்றும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனாஸ்ட் உள்ளிட்ட தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்