தி.மு.க தேர்தல் அறிக்கை

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
தி.மு.க தேர்தல் அறிக்கை
x
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்படும். 1976-ல் மத்திய அரசு பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும். இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் தாமதமில்லாமல் இந்திய குடியுரிமை அளிக்கப்படும். கடந்த 11 ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்ட பணிகள் மீண்டும் துவங்கப்பட்டு, விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தப்படும். தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

மருத்துவ கல்லூரிகளில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் "நீட்" தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்கள் பெற்றுள்ள கல்வி கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ஆம் வகுப்பு வரை படித்துள்ள 1 கோடி இளைஞர்கள் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் அனைத்திலும் சென்ற 5 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், குறைந்தபட்ச வேலை நாட்களின் எண்ணிக்கை 150 நாளாக உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்தையும், நிலவளத்தையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்படும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும். தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர் கடன்களும் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். முல்லை பெரியாறு மற்றும் காவிரியின் குறுக்கே மேகதாதுவிலும் புதிய அணைகள் கட்டும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும். தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய இலவச மின்சாரம் வழங்கப்படும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்  கொண்டு வரப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும். மத்திய அரசின் மொத்த வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும், வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடைய தேவையான ஊக்கம் கிடைத்திட மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும் பாரபட்சம் இல்லாமலும் நிதி பங்கீடு செய்யப்பட வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மத்திய நிதி குழுவின் அமைப்பும், அதன் பணிகளும் மாநிலங்களின் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும். கிராமப் பகுதிகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கப்படும். 10ஆம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்படுவர். தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் 50 லட்சம் பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.


Next Story

மேலும் செய்திகள்