அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த முக்கிய நபர்கள்

கடந்த காலங்களில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த முக்கிய நபர்கள் குறித்து இப்போது பார்ப்போம்....
x
அதிமுக தொடக்க காலம் முதல் அக்கட்சியில் இருந்த எ.வ. வேலு, எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அணியில் சேர்ந்தார். பின்பு அதிமுகவில் சேர்க்கப்படாததால் எ.வ. வேலு திமுகவில் இணைந்தார். திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த எ.வ. வேலு இன்று அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது ஜெயலலிதா அணியில் இருந்த கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுவிலிருந்து விலகி 1999-ல் திமுகவில் இணைந்தார். தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக 1991 முதல் 5 ஆண்டுகள் பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா. வாஜ்பாய் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றியவர். 2008 ஆம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா முதன்முதலாக முதலமைச்சரானபோது அவரது அமைச்சரவையில் ரகுபதி இடம்பெற்றிருந்தார். 2000ஆம் ஆண்டில் தி.மு.க.வில் இணைந்த ரகுபதிக்கு அரசியலில் பெரும் வளர்ச்சி இருந்தது. மத்திய இணை அமைச்சர், எம்.எல்.ஏ. என புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.வின் அதிகார மையமாக விளங்கி வரும் ரகுபதி தற்போது திருமயம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். ஜெயலலிதா முதன்முதலாக முதல் அமைச்சரானபோது அந்த அமைச்சரவையில் இடம் பெற்றவர் செல்வகணபதி. ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தி.மு.க.வில் இணைந்த செல்வகணபதிக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கப்பட்டது. சேலத்தில் தி.மு.க.வின் அதிகார மையமாக விளங்கிய மறைந்த வீர்பாண்டி ஆறுமுகத்தோடு அரசியல் செய்தவர் செல்வகணபதி. அதிமுக முன்னாள் அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 2009 ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து அனிதா ராதா கிருஷ்ணன் திமுகவில் இணைந்தார். தற்போது திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மூத்த அமைச்சராக இருந்த முத்துசாமி அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார் .இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் முத்துசாமி திமுகவில் இணைந்தார். திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் கருப்பசாமி பாண்டியன், பின்னர் கட்சியில் உரிய அங்கீகாரம் தரப்படாததால் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த அவர் திமுகவில் சேர்ந்தார், கடந்த 2015 ஆம் ஆண்டு திமுகவில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக எம்.எல்வாக இருந்த கேபி ராமலிங்கம் பின்னர் திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அ.தி.மு.க.வின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர் சேகர்பாபு. பொது இடங்களில் ஜெயலலிதா இவரை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். தலைமையோடு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தி.மு.க.வில் இணைந்த சேகர்பாபு இப்போது தி.மு.க. தலைவருக்கு அருகில் இருக்கும் அளவுக்கு தன் செல்வாக்கை உயர்த்திக் கொண்டுள்ளார். அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ.கருப்பையாவும் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்