பாரத ரத்னா வாஜ்பாய் வரலாறு...

முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 93. அரசியல், சமூகம், கலை என பல்வேறு பிரிவுகளில் சாதனைகள் படைத்த பாரத ரத்னா வாஜ்பாய் பற்றிய முக்கிய குறிப்புகள் இங்கே...
பாரத ரத்னா வாஜ்பாய் வரலாறு...
x
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924 ஆம் ஆண்டு கிருஷ்ணா தேவி மற்றும் கிருஷ்ணா பிஹாரி வாஜ்பாய்க்கு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய். விக்டோரியா கல்லூரியில் சமஸ்கிருதம், இந்தியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கான்பூர் டிஏவி கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். சட்டப்படிப்பில் சேர்ந்த வாஜ்பாய், அதை பாதியில் விட்டுவிட்டு, 1939-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் முழுநேர பிரச்சாகராக சேர்ந்தார். 'பாஞ்சஜன்யா' என்ற இந்தி வார இதழ், 'ராஷ்டிரதர்மா' என்ற இந்தி மாத இதழ், 'அர்ஜுன்', 'ஸ்வதேஷ்' நாளேடுகளில் ஆசிரியராகப் பணியாற்றிய வாஜ்பாய்,  ஷியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கிய 'பாரதிய ஜனசங்கம்' கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக செயல்பட்டார். நாட்டின் விடுதலைக்குப் பிறகு நடந்த 2-வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பாரதிய ஜனசங்கத்தின் மக்களவை கட்சித் தலைவராக 1957 முதல் 1977ஆம் ஆண்டு வரை அவர் பதவி வகித்தார். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி, குஜராத் மாநிலங்களில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வென்றார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ல் வெளியுறவு துறை அமைச்சராக அங்கம் வகித்தார் வாஜ்பாய். பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக 1980 முதல் 6 ஆண்டுகாலம் இருந்தார். இந்தியப் பிரதமராக 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இயற்கையை நேசிப்பவர், சிறந்த எழுத்தாளர், வசீகரமான பேச்சாளர், கவிஞர், கட்சி வேறுபாடின்றி அனைவராலும் விரும்பப்பட்ட ஆளுமை அடல் பிகாரி வாஜ்பாய். 



Next Story

மேலும் செய்திகள்