கமலை வைத்து காய் நகர்த்துகிறதா காங்கிரஸ் ..?

சோனியா காந்தி, ராகுல் காந்தி உடனான கமல்ஹாசன் சந்திப்பு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு மாறுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
கமலை வைத்து காய் நகர்த்துகிறதா காங்கிரஸ் ..?
x
இந்த பக்கமும் இல்லை, அந்த பக்கமும் இல்லை, மய்யமாக இருப்பேன் என கூறி தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என பெயரிட்டு அரசியல் பயணத்தை தொடங்கினார், கமல்ஹாசன்...

சுற்றுப்பயணம் மூலம் மக்கள் மனதில் இடம்பிடிக்க களமிறங்கிய கமல், தேசிய தலைவர்கள் உடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும் தவறவில்லை. 

கட்சி தொடங்கும் முன்பே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்துப் பேசினார். தமிழகத்திலும் கருணாநிதி தொடங்கி ரஜினி வரை அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்த கமல், அதிமுக மற்றும் பாஜக தலைவர்களை மட்டும் சந்திக்கவில்லை. அதுமட்டுமின்றி, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள மாநில முதலமைச்சர்களோடும் கமல்ஹாசன் நட்பு பாராட்டுகிறார். 

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மனம் திறந்து பாராட்டும் கமல், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து காவிரி விவகாரம் குறித்தும் பேசினார். உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டாலும், இரு மாநிலங்களுக்கு இடையிலான நல்லெண்ணமே அணைக்கதவை திறக்கும் என்ற கமலின் கருத்தும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர்களுடன்,  கமல் நடத்திய சந்திப்பு பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று புதன்கிழமை சந்தித்த கமல், தமிழக அரசியல் சூழல் குறித்து பேசியதாக கூறினார். கமலுடனான சந்திப்பு குறித்து கரு​்​துது தெரிவித்துள்ள ராகுல் காந்தி, காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சி பிரச்சினைகள் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் சூழல் குறித்து திருநாவுக்கரசரிடம் கேட்காமல், கமலிடம் ராகுல் காந்தி கேட்டுள்ளது வியப்பாக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை விமர்சித்தார். 


முதல் நாள் ராகுல் காந்தியை சந்தித்த கமல், அடுத்த நாள் சோனியா காந்தியையும் சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை என்ற கமல், நேரம் வரும் போது ஒருவேளை பேசலாம் என கூறினார். காங்கிரஸ் தலைவர்களுடன் கமல் சந்திப்பு குறித்து திருநாவுக்கரசரிடம் கேட்ட போது, தேர்தல் நேரத்தில் அரசியல் சந்திப்புகள் சகஜம் என விளக்கமளித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலை குறிவைத்து, இந்த சந்திப்புகள் நடைபெறுகிறதா...? என்ற கேள்வியை இரண்டும் தரப்பும் மறுக்கவில்லை. ஆக, பாஜகவுக்கு எதிர் திசையில் இயங்கும் கமலை தன் கூட்டணிக்குள் இழுக்க  காங்கிரஸ் முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா...? என்ற கேள்வியும் இங்கே எழுகிறது. 

இதற்கு காரணம், திமுகவின் தோழமை கட்சி தலைவரான திருமாவளவன், அண்மையில் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பும் தற்போது கவனம் பெறுகிறது. மக்களவை தேர்தலுக்கு தயாராகும் ராகுல் காந்தி, தமிழகத்தில் புதிய வியூகங்களை வகுக்க தொடங்கியிருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமலை மட்டுமல்ல ரஜினியையும் அணுக காங்கிரஸ் முயற்சிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் கராத்தே தியாகராஜன், ரஜினியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கிறார். அவர் மூலமும் காங்கிரஸின் தூது சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது. திமுக இல்லாத மெகா கூட்டணி ஒன்றை அமைக்க, ராகுல் காந்தி தயாராகிறா என்ற கேள்வி, தமிழக அரசியலில் புதிய வாய்ப்புகளையும், விவாதங்களையும் கிளப்பி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்