தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் ஸ்வப்னாவுடன் இருந்த சந்தீப் நாயரும் கைது

கேரள தங்க கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிலையில் ஸ்வப்னா, சந்தீப் நாயர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் ஸ்வப்னாவுடன் இருந்த சந்தீப் நாயரும் கைது
x
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தியதாக வெளியான தகவல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த சம்பவத்தில் ஷரித் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாகினர். 

ஸ்வப்னா, கேரள தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியாக இருந்து இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக மாறினார். இவருடன் தொடர்பில் இருந்த கேரள மாநில முதலமைச்சரின் செயலாளரான சிவசங்கரனும் பதவி நீக்கம் செய்யப்பட்டு என்ஐஏ அதிகாரிகளின் விசாரணை வளையத்திற்குள் வந்தார். 

இந்த சூழலில் தான் ஸ்வப்னா சுரேஷ் தனது கணவர், குழந்தைகள் மற்றும் நண்பர் சந்தீப் நாயருடன் தலைமறைவானார். கேரளாவில் விவகாரம் முற்றிய நிலையில் பெங்களூருக்கு தப்பிச் சென்றார் ஸ்வப்னா. எங்கே அவர் என என்ஐஏ அதிகாரிகள் தேடிச் சென்ற நிலையில் ஸ்வப்னா மகளின் செல்போனே அவர்களை காட்டிக் கொடுத்தது. 

இதையடுத்து பெங்களூருவில் உள்ள குடியிருப்பில் இருந்த ஸ்வப்னா, அவரின் கணவர், குழந்தைகள் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களை பெண் அதிகாரி கொண்ட 10 பேர் குழு கேரளாவுக்கு அழைத்துச் சென்றது. அப்போது தன் குழந்தைகள், கணவருடன் காரில் வந்தார் ஸ்வப்னா.  

முன்னதாக ஆலுவாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 பேருக்கும் மருத்துவ சோதனைகளும் நடத்தப்பட்டன. அதன்பிறகு  இருவரையும் என்ஐஏ அலுவலகத்திற்கு கொண்டு  சென்ற அதிகாரிகள், விசாரணைக்கு பிறகு கலூர் பகுதியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 

பின்னர் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதோடு, முடிவுகள் வந்த பிறகே சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் இதுவரை பிரதானமான 3 பேர் கைதாகி உள்ள நிலையில் 4 வது குற்றவாளியாக கருதப்படும் பாசில் பரீதை போனில் தொடர்பு கொண்டு என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத், தற்போது அரேபிய நாட்டில் பெரும் செல்வந்தர். 

தன்னுடைய பண பலத்தால் துபாயில் ஆடம்பர வாழ்க்கை நடத்திவருகிறார் பாசில் பரீத். சினிமா நட்சத்திரங்களுடன் தொடர்பு, கார் பந்தயம் என இருக்கும் பரீத் தான், கடத்தல் தங்கத்தை திருவனந்தபுரத்திற்கு அனுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் பரீதை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். ஆனால் தனக்கும் இந்த கடத்தலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

 இந்த வழக்கில் தொடர்புடைய சந்தீப் நாயர், ஸ்வப்னாவுடன் சேர்ந்து தங்கம் கடத்தியது உண்மை தான் என சந்தீப் நாயரின் மனைவியே வாக்குமூலம் அளித்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தினால் பல முக்கிய புள்ளிகளின் பெயர்களும் வெளியே வரலாம் என கூறப்படுகிறது. 

இதனிடையே ஊரடங்கு கடுமையாக உள்ள கேரளாவில் இருந்து ஸ்வப்னா காரில் தப்பியது எப்படி? அவர் தப்பிச் செல்ல உடந்தையாக இருந்தது யார்? என்பது உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தை கையில் எடுத்திருக்கின்றன. இதற்கெல்லாம் ஸ்வப்னாவும், கைதான மற்றவர்களும் வாய் திறந்தால் மட்டுமே பதில் கிடைக்கும்... 

Next Story

மேலும் செய்திகள்