"செல்போன் சர்வீஸை அத்தியாவசிய சேவையாக்க வேண்டும்" - இந்திய செல்போன் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை

இந்தியாவில் ஊரடங்கு நீடிக்கும் பட்சத்தில் சுமார் 4 கோடி செல்போன்கள் செயல்படுவதில் சிக்கல் ஏற்படும் என தெரிய வந்துள்ளது
செல்போன் சர்வீஸை அத்தியாவசிய சேவையாக்க வேண்டும் - இந்திய செல்போன் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
x
இந்தியாவில் தற்போது சுமார் 85 கோடி செல்போன்கள் வரை பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு மாதமும் புதிதாக சுமார் இரண்டரை கோடி செல்போன்கள் விற்பனையாகி வருகின்றன. அதுபோல, பல்வேறு காரணங்களால், ஒவ்வொரு மாதமும் செயலிழக்கும் செல்போன்களின் எண்ணிக்கையும் சுமார் இரண்டரை கோடியாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு நீடிப்பதால், செயலிழந்த செல்போன்களை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய கணக்குப்படி சுமார் இரண்டரை  கோடி பேரின் செல்போன் எண்கள் இயங்காமல் உள்ளதாக செல்போன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14 வரையிலும், இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரையிலும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செல்போன் பயன்பாட்டில் இந்த நிலை உள்ளது.

இதே நிலை நீடித்தால், அதாவது மே 3 ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், சுமார் 4 கோடி செல்போன்கள் செயலிழக்கும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து செல்போன் ரிப்பேர் நிறுவனங்கள், செல்போன் ரீசார்ஜ் மையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் செல்போனையும் சேர்க்க வேண்டும் என உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

உள்ளங்கைகளில் உலகத்தை கொண்டு வரும் செல்போன்கள்தான் பலருக்கு உள்ளங்கைகளாக இருந்து வருகிறது. அது செயலிழந்து புதிய சிக்கல் உருவாகும் முன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்