டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் கால்கள் - சாலை, ரயில் பாதைகளில் நடந்தே செல்லும் அவலம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல் தவித்த வெளி மாநிலத்தவர்கள் பலரும் சாலை மற்றும் ரயில் பாதைகளில் நடந்தே செல்ல துவங்கியுள்ளனர்.
டெல்லியிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் கால்கள் - சாலை, ரயில் பாதைகளில் நடந்தே செல்லும் அவலம்
x
கொரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு ஒட்டுமொத்த பணிகளையும் ஸ்தம்பிக்கச் செய்து, வாழ்வாதாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி வருகிறது.

ஏழை எளிய மக்கள் பயணம் செய்து வந்த பயணிகள் ரயில் சேவை ஏப்ரல் 14ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி காலத்தில் குடும்பத்துடன் இருக்க வேண்டி அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்காக போட்டு இருந்த திட்டங்கள் தவிடு பொடியாகிவிட்டன.

கூலி தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிற்கூடங்கள், ஓட்டல்களில் வேலை ஆகியவற்றை நம்பி, கிராமங்களிலிருந்து மாநகருக்கு வாழ்வாதாரத்தை தேடி புலம் பெயர்ந்த மக்கள், சொந்த ஊருக்கு பல நூறு மைல்கள் நடந்தே சென்றுகொண்டிருக்கின்றனர்.  இதில் குழந்தைகளும் அடக்கம். 

சிலர் ரயில் பாதைகளின் வழியே  நடந்து அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ராஜஸ்தான்,  பீகார் ஆகிய இடங்களை அடைய அபாய பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

சிலர் பால் வாகனங்களில் உள்ள டேங்கர்களில் பதுங்கி, அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். டெல்லி, உத்தரபிரதேச எல்லையில் உள்ள காஜீப்பூரில் கூட்டம், கூட்டமாய் மக்கள், நடந்தே செல்வதால், சமூக விலகல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

இதனி​டையே 24 மணி நேரம் தங்கும் குடில்களில் நாள்தோறும் 20,000 பேருக்கு உணவு அளிக்கப்பட்டு வருவதாகவும், அண்டை மாநில மக்கள் புலம்பெயர வேண்டாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 

மாநகரங்களில் வெறிச்சோடிய சாலைகள், எங்கும் நிலவும் மயான அமைதிக்கு மத்தியில் வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்ட கால்கள் நெடிய பயணத்தை மேற்கொண்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்