டெல்லி வன்முறை... அமித்ஷா விளக்கம்

டெல்லி வன்முறைக்கு காரணமான ஒருவர் கூட சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
x
டெல்லி வன்முறை தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசிய  அமித்ஷா, 36 மணி நேரத்தில் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் வேறு பகுதிகளுக்கு பரவாமல் டெல்லி போலீசார் தடுத்ததாகவும் கூறினார்.  

இந்த வன்முறையை அரசியலாக்க சிலர் முயன்றதாகவும், அமெரிக்க அதிபரின் குஜராத் பயணம் திட்டமிடப்பட்டது என்பதால் தாம் அங்கு இருந்ததாகவும், மறுநாள் டெல்லி பயணத்தின் போது, காவல்துறை அதிகாரிகளுடன் இருந்ததாகவும் அமித்ஷா தெரிவித்தார்.

இதையடுத்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகரை செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் அந்த சமயத்தில் தனக்கு பாதுகாவலர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவே சம்பவ இடத்துக்கு செல்லவில்லை எனவும் கூறினார். பிப்ரவரி 27 முதல் இதுவரை 700 எப்ஐஆர் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், டெல்லி வன்முறை திட்டமிடப்பட்ட ஒன்று என்றும், வன்முறையில் தொடர்புடையவர்கள் ஒருவர் கூட தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது எனவும் அமித்ஷா கூறினார். இதுபோல, பிப்ரவரி 22 முதல் 26 வரையிலும் 60 சமூக வலைதளங்கள் தொடங்கப்பட்டு உடனடியாக மூடப்பட்டதாகவும் வெறுப்பை உருவாக்க பயன்பட்ட இந்த வலைதளங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

அப்பாவிகள் யார் மீதும் நடவடிக்கை பாயாது என தெரிவித்த அமித்ஷா, இதுவரை 153 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின் கீழ் 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். சதி ஆலோசனை நடைபெறாமல், குறுகிய காலத்தில் இந்தளவுக்கு வன்முறை பரவ வாய்ப்பில்லை என்றும் இது தொடர்பாக விசாரிக்க ஏதுவாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக​வும் அமித்ஷா தெரிவித்தார். 

டெல்லி கலவரத்துக்கு நிதியுதவி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நாடாளுமன்றத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்