பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான நான்கு பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதான நான்கு பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு
x
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் சாத்நகர் பகுதியை சேர்ந்த 27 வயது  கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி. 

கடந்த 27ஆம் தேதி இரவு, பணி முடிந்து பிரியங்கா ரெட்டி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே இருசக்கர வாகனம் பழுதானது. அப்போது பிரியங்கா ரெட்டிக்கு உதவுவது போல நடித்த இளைஞர்கள் அவரை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவரை அந்த கொடூர இளைஞர்கள் கொலை செய்து பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் வாங்கி வந்து, உடலை பாலம் ஒன்றின் கீழ் எரித்தனர்.  

தகவலறிந்து விசாரணையில் இறங்கிய சாத்நகர் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.  லாரி ஓட்டுனர்கள் முகமத் ஆரிப், சென்னகேசவ் மற்றும் கிளீனர்கள் சிவா, நவீன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

கொலையாளிகள் 4 பேரையும் போலீசார் சாத்நகர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தபோது காவல்நிலையம் முன் திரண்ட பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 4 கொலையாளிகளையும் செஞ்சலகுடா சிறையில் அடைத்து வைத்திருந்தனர். 

பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை நான்கு கொலையாளிகளையும் நீதிமன்ற காவலில் எடுத்த போலீசார், விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இன்று அதிகாலை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பார்வையிட்டனர். அங்கு இருந்த பிரியங்கா ரெட்டியின் செல்போன் கைப்பற்றப்பட்டது. கொலை செய்தது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அந்த நான்கு பேரும் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். என்கவுட்டரில்  4 பேரும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்