11 மணி நேரம் நீடித்த போலீஸ் போராட்டம் :போலீசாரின் போராட்டத்தால் முடங்கிய டெல்லி

வழக்கறிஞர்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் போலீசார் நடத்திய 11 மணி நேர போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
11 மணி நேரம் நீடித்த போலீஸ் போராட்டம் :போலீசாரின் போராட்டத்தால் முடங்கிய டெல்லி
x
டெல்லியில், ஒட்டு மொத்த போலீசாரும் போராட்ட களத்தில் குதித்திருப்பது, ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி கடந்த 2ம் தேதியன்று தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக காவலர் ஒருவருக்கும் வழக்கறிஞர் ஒருவருக்கும் எழுந்த சாதாரண வாக்குவாதம், அடிதடியாக மாறி போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையிலான மோதலாக மாறியது. அடுத்த 2 மணி நேரத்தில் அங்கிருந்த பைக், போலீஸ் வாகனங்கள் வழக்கறிஞர்களின் கார்கள் என 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. இணை ஆணையர் உட்பட 20 போலீசாரும் 8 வழக்கறிஞர்களும் காயமடைந்தனர். இதையடுத்து ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி படேல் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது டெல்லி உயர் நீதிமன்றம். இது தொடர்பாக வழக்குகளும் போடப்பட்டன. இதற்கிடையே காயமடைந்த வழக்கறிஞர்களை மருத்துவமனையில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் முதலமைச்சர் கெஜ்ரிவால். அதே நேரத்தில் இணை ஆணையர் உள்ளிட்ட சிலர் மீது சஸ்பெண்ட் உத்தரவு பாய்ந்ததால் ஆவேசமடைந்தனர் போலீசார்.  இதனால் கலவரம் நடந்து 4 நாட்கள் கடந்த நிலையில் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு ஒட்டு மொத்த போலீசாரும் குவிந்தனர். காவல் ஆணையரின் சமரசத்தையும் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது டெல்லியில் பணியாற்றிய கிரண்பேடி போன்ற துணிச்சலான ஆணையர் தேவை எனவும் போலீசார் கோஷமிட்டனர். தாக்கியவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸ் அதிகாரி மீதான இடைநீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர அதே நேரத்தில் போலீசாரின் குடும்பத்தினர் இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்த டெல்லியும் முடங்கும் அளவுக்கு போராட்டம் தீவிரமான நிலையில் உயர் அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பெய்ஜால். இதையடுத்து, பொது அமைதியை காப்பாற்றுவதோடு  காயமடைந்த போலீசாருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை தலைமைச் செயலாளர் உறுதி செய்ய வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.  டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யும் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் காயமடைந்த போலீசாருக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும் எனவும் டெல்லி போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து செவ்வாய் கிழமை காலையில் தொடங்கிய டெல்லி போலீசாரின் 11 மணி நேர போராட்டம் இரவு 8 மணி அளவில் முடிவுக்கு வந்தது. எனினும் இந்த விவகாரம் முடிந்து விடவில்லை.  மத்திய உள்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் டெல்லி காவல்துறை வருவதால் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வருகிறது. அரசியல் கட்சிகளும் களம் இறங்கிய நிலையில்  நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெறுவதால் இந்த விவகாரத்தில் அடுத்ததாக என்ன நடக்கும் ஆளுநரின் அடுத்த நடவடிக்கை என்ன என்பதை இரு தரப்பினருமே உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்