அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5 மணியுடன் நிறைவு

ராமஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் காரசாரமான வாதம் நடைபெற்று வருகிறது.
அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5  மணியுடன் நிறைவு
x
அயோத்தி  ராமஜென்ம பூமி - பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, விசாரித்து வருகிறது.

கடந்த 39 நாட்களாக நாள்தோறும் விசாரித்து வந்த நிலையில் இன்று இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

மாலை 5 மணியுடன் விசாரணை முடிவடைய உள்ள நிலையில், இந்து அமைப்புகளுக்கு 45 நிமிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இன்று வழக்கு விசாரணை தொடங்கியதும், அயோத்தி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான மத்தியஸ்த குழு  தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

இதனை தொடர்ந்து, இந்து மகாசபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தமது தரப்பு இறுதி வாதத்தை எடுத்து வைத்தார். வரையறுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பேசிய போது, நீதிபதிகள் குறுக்கிட்டனர்.

அப்போது, இந்து மகாசபா வழக்கறிஞர் நடந்துகொண்ட விதத்தை எச்சரித்த தலைமை நீதிபதி, ஒருகட்டத்தில் வழக்கு விசாரணையில் இருந்து எழுந்து சென்றுவிடுவேன் என கோபமாக தெரிவித்தார்.

ராம்லாலா விர்ஜமான் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பராசரன், இந்த இடத்திற்காக இந்துக்கள் நூற்றாண்டுகளாக போராடி வருவதாக தெரிவித்தார்.

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொள்ள ஏராளமான மசூதிகள் உள்ளதாகவும், அயோத்தியில் மட்டும் 55 முதல் 60 மசூதிகள் உள்ளதாகவும் பராசரன் சுட்டிக்காட்டினார்.

ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது என்றும், இந்த இடம் இந்துக்களுக்கு புனிதமானது என்றும் பராசரன் வாதிட்டார்.

இதனை தொடர்ந்து, வக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவன், அயோத்தியாவில் எத்தனை கோயில்கள் உள்ளது என எதிர் கேள்வி எழுப்பினார்.



Next Story

மேலும் செய்திகள்