அருண் ஜெட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு அரசியல் கட்சியினர், மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்
அருண் ஜெட்லி மறைவு : தலைவர்கள் இரங்கல்
x
குடியரசு தலைவர் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அருண் ஜெட்லியின் மறைவு செய்தியை கேட்டு துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். சிறந்த வழக்கறிஞர், அனுபவம் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர், புகழ்பெற்ற அமைச்சரான அருண்ஜெட்லி, தேசத்தின் வளர்ச்சியை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றியவர் என்று, குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி 

நாட்டின் வளர்ச்சிக்கு நீண்ட பங்காற்றியவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அருண் ஜெட்லி முன்னணியில் இருந்ததாகவும், பாஜகவில் அனைவராலும் விரும்பப்பட்ட முக்கிய தலைவர் என்றும் கூறியுள்ளார். தனிப்பட்ட முறையில் சிறந்த நண்பர் என்றும் மோடி கூறியுள்ளார். அருண்ஜெட்லியின் மனைவி மற்றும் மகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாகவும் மோடி கூறியுள்ளார். தற்போதைய வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என இருவரும் கேட்டுகொண்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

வெங்கய்யா நாயுடு 

அரசியலை கடந்து, மிக நெருங்கிய குடும்ப நண்பரை இழந்துவிட்டதாக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். சென்னையில் இரங்கல் தெரிவித்து பேசிய அவர், கட்சிகளை கடந்து அனைவரிடமும் அன்பு பாராட்டிய பண்பாளர்  என்றார். ஜி.எஸ்.டி போன்ற சிறப்பு மிக்க சட்டங்களை ​கொண்டு வந்த, மிக எளிமையான அவர், விரைவில் மரணத்தை தழுவுவார் என எதிர்பார்க்கவில்லை என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். 

சோனியா காந்தி

அருண் ஜெட்லியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நீண்ட நாள் மக்கள் சேவையில் இருந்த அருண்ஜேட்லி, எம்.பி.யாகவும், அமைச்சராகவும் செய்த மக்கள் சேவை என்றும் நினைவு கூரத் தக்கது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு  பொருள்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியவர் அருண் ஜெட்லி என்றும், நாடாளுமன்றத்தில் தமது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசக்கூடியவர் என்றும் கூறியுள்ளார். கொள்கை மாறுபாடு கொண்ட பிற கட்சியினருடனும் அருண் ஜெட்லி அன்பாக பழக்கூடியவர் என்றும் அவரை  இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதனிடையே இறுதிச் சடங்கில் பங்கேற்க அரசு சார்பில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயகுமார் ஆகியோர் நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின்

அருண்ஜெட்லி மரணமடைந்த செய்தியை அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக, திமுக தலைவர் ஸ்டாலின், தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அருண் ஜெட்லி ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல - நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவர் எனவும், ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், பிரதமர் மோடிக்கும், சக வழக்கறிஞர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாக, ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

டி.கே.எஸ்.இளங்கோவன் 

முக்கியமான பிரச்சினைகளில் ஆழமான கருத்துகளை பதிவு செய்யும் ஒரு நல்ல நாடாளுமன்ற உறுப்பினரை இழந்துவிட்டதாக தி.மு.க எம்.பி டி.கே.எஸ்.இளங்கோவன்  தெரிவித்துள்ளார்.

எம்.பி திருநாவுக்கரசர்

அருண்ஜெட்லியின் மரணம், தமக்கு வருத்தம் அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அருண்ஜெட்லியின் குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்