ராஜஸ்தான் மாநிலத்தின் ஆடு வளர்ப்பு அதிகரிக்கும் பின்னணி என்ன ?

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆடு வளர்ப்பு, அங்குள்ள விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருவதன் பின்னணியைப் பார்க்கலாம்...
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆடு வளர்ப்பு அதிகரிக்கும் பின்னணி என்ன ?
x
ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் வளர்க்கப்படும் ஆடுகள், ஆரோக்கியமானவை. அதன் இறைச்சி சுவையாக இருக்கும் என, நற்சான்றிதழ் பெற்றவை. அந்த ஆடுகளின் வால், சற்று நீளமானதாக இருக்கிறது. ராஜஸ்தானில் உள்ள 'சிரோகி' (Sirohi) ஆடு, சர்வதேச அளவில் பிரபலமானவை. இவை வெப்பத்தை தாங்கி வளர்பவை... கோடை காலங்களில் வெள்ளாடுகளில், கழிச்சல் போன்ற நோய் தாக்கும். ஆனால், இந்த நோய், 'சிரோகி' ஆடுகளை தாக்காது. 

இந்த வகை ஆடுகள், ராஜஸ்தான் மாநிலத்தில், அதிகளவில் வளர்க்கப்படுகிறது. வறட்சி, வெப்பத்தை தாங்குவதோடு, பிற ஆடுகளை விட, இவை கூடுதல் எடை கொண்டவை. இவை, ஆறே மாதத்தில் 35 கிலோவாக இருக்கும். வெள்ளாடுகள், அதிகபட்சம் 25 கிலோ தான். 2007ம் ஆண்டு கால்நடைகள் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 15 புள்ளி 4 கோடி ஆடுகள் உள்ளன. ஏறக்குறைய ஒரு கோடி கிராம மக்களுக்கு ஆடு வளர்ப்பு தான் வாழ்வாதாரம். நாட்டிலேயே, அதிகமாக, சுமார் 2 புள்ளி 15 கோடி ஆடுகள் ராஜஸ்தானில் உள்ளன. அதாவது மொத்த ஆடுகளின் எண்ணிக்கையில், இது 14 சதவீதம். தமிழகத்தில் 1 புள்ளி 07 சதவீதம் ஆடுகள் மட்டுமே உள்ளன. 

மற்ற மாநிலங்களில், ஆடுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 15 சதவீதம் மட்டுமே அதிகரிக்கிறது. ஆனால், ராஜஸ்தானில் 27 சதவீதம் அதிகரிக்கிறது. விவசாயத்திற்கோ, நகர மயமாதலுக்கோ வழியில்லாத, தரிசு நிலப்பரப்பு அதிகரிப்பால் இது சாத்தியமாகிறது. தரிசு நிலமே, ராஜஸ்தானில் மேய்ச்சல் நிலமாகவும் பயன்படுகிறது. இங்கு 60 சதவீத விளைச்சல் நிலம், தரிசாக மாறி விட்டது. விவசாயத்தை விட, ஆடு வளர்ப்பு லாபம் தருவதால், ராஜஸ்தானில், எல்லா விவசாயிகளுமே ஆடு வளர்ப்புக்கு மாறி விட்டனர். 

கடந்த 50 ஆண்டுகளில், 40 முறை வறட்சியை சந்தித்துள்ள மாநிலம் ராஜஸ்தான். மொத்தமுள்ள சுமார் 2 புள்ளி 16 கோடி ஹெக்டேர் விளைச்சல் நிலத்தில், மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவான நிலப்பரப்பில் தான் விவசாயம் நடைபெறுகிறது. செயற்கை உரங்களால் நிலம் பாதிப்பு, நிச்சயமற்ற பருவநிலை போன்ற காரணங்களால், ராஜஸ்தானின் வளமான பகுதிகளில் கூட ஆட்டுப் பண்ணைகளையும், கால்நடை விவசாயிகளையும் அதிகரித்துள்ளது. இங்குள்ள தினசரி ஆட்டுச் சந்தையில் நடக்கும் ஒருநாள் வியாபாரம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்.

ராஜஸ்தானின் மேற்கு பகுதியில், சிறு விவசாயிகளின் 60 சதவீத வருமானம் கால்நடை வளர்ப்பால் கிடைக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை கருத்தரிக்கும் கால்நடைகளை, விளை பயிர்களில் லாபம் எடுப்பது போல எடுத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு முறை கிடைக்கும் குட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து விவசாயிகள் வளர்ச்சியடைகின்றனர். ஆடு வளர்ப்பு மற்றும் உற்பத்தி மித மிஞ்சி இருந்தாலும், இங்கு கணிசமான மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள்... இங்குள்ள ஜைன மதத்தினரின், புலால் உண்ணாமையால், ஆடுகளின் இறைச்சி, கட்டாய ஏற்றுமதியை நோக்கித் தள்ளுகின்றன. கிராமப்புற விவசாயிகளிடையே, 'இறைச்சி சாப்பிடுவது ஆடம்பரம்' என்ற பொருளாதார காரணமும் இருக்கிறது.   

ஆனால், தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் கணிசமானோர் ஆட்டிறைச்சியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து, 80 சதவீத ஆட்டிறைச்சி சர்வதேச அளவில் ஏற்றுமதியாகிறது. வெள்ளாட்டு இறைச்சி 300 ரூபாய், செம்மறியாட்டு இறைச்சி 200 ரூபாய் என்ற விலையில் எளிதாக கிடைக்கிறது. தமிழகத்திற்கு வரும் ராஜஸ்தான் ஆட்டு இறைச்சி, ஏறக்குறைய கிலோ 150 ரூபாய்க்கு, சில்லறை விற்பனையில் கிடைக்கிறது. உள்ளூரில் வெட்டப்படும் ஆட்டிறைச்சி 500 ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் இருந்து தினந்தோறும் 4 ஆயிரம் கிலோ ஆட்டு இறைச்சி தமிழகம் வருகிறது. 

வட மாநிலங்களில் மாபெரும் கால்நடை வளம் இருந்தும், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் நுகர்வு கிடையாது. தென் மாநிலங்களில், நுகர்வு அதிகம் இருந்தாலும், இங்கே போதிய அளவு இறைச்சி கிடைப்பதில்லை. இது தான் இன்றைய நிலை.

Next Story

மேலும் செய்திகள்